சைக்கிள் சின்னம்- தேர்தல் ஆணையம் செல்கிறார் ராம் கோபால் யாதவ்

சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்க அகிலேஷ் யாதவ் ஆதரவு தலைவருமான, ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் கோபால் யாதவ் இன்று தேர்தல் ஆணையம் செல்கிறார். 

Last Updated : Jan 3, 2017, 10:16 AM IST
சைக்கிள் சின்னம்- தேர்தல் ஆணையம் செல்கிறார் ராம் கோபால் யாதவ் title=

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்க அகிலேஷ் யாதவ் ஆதரவு தலைவருமான, ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் கோபால் யாதவ் இன்று தேர்தல் ஆணையம் செல்கிறார். 

உ.பி.,யில் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அங்கு ஆளும் சமாஜ்வாடி கட்சியில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு இருக்கிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், கட்சியின் மாநில தலைவரும், முலாயம் சிங்கின் தம்பியுமான சிவபால் சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை முலாயம் சிங்கின் மற்றொரு தம்பி ராம்கோபால் யாதவ் நேற்று கூட்டி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் சிங் நீக்கப்பட்டார். பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தையும் அகிலேஷ் யாதவ் தரப்பினர் கைப்பற்றினர்.

தற்போது அக்கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற அகிலேஷ் மற்றும் முலாயம் தரப்பினர் இடையே கடும் முயற்சி நடந்து வருகிறது. இதனால் கட்சியின் சின்னத்தை மீட்க முலாயம் சிங் நேற்று டெல்லி சென்றார். அவருடன் சிவபால் சிங், அமர் சிங், ஜெயப்பிரதா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

இதனிடையே புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் ஆதரவு தலைமை இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கிறது. இன்று 11:30 மணியளவில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார், அப்போது தங்களுக்கு சைக்கிள் சின்னத்தை தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். சைக்கிள் சின்னம் என்பது தேர்தல் ஆணையம் கையில் உள்ளது. 

இந்த பிரச்சினை குறித்து தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஒரு கட்சியில் இரு தரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டால் பெரும்பான்மை நிர்வாகிகள் உள்ள கட்சிக்கு அதன் சின்னமும், மற்றொரு தரப்பினருக்கு வேறொரு சின்னமும் ஒதுக்கலாம். 

அதே சமயம் இரு தரப்பினரும் சமபலத்துடன் இருந்தால் அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது இரு தரப்பினரும் வேறு சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்றார்.

Trending News