காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிக்க பாராளுமன்ற மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது!
இந்த ஆண்டு இறுதியில் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுவரை அங்கு மேலும் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான மசோதா மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீட்டு மசோதா ஆகிய 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இவ்விரு மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (ஜூலை 1) மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
மாநிலங்களவையில் பாஜக-விற்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் பல மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் பாஜக மற்றும் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வரும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்., காஷ்மீர் தொடர்பாக பாஜக கொண்டு வந்துள்ள 2 மசோதாக்களுக்கு தனது ஆதரவு தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியும் பாஜக-விற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிக்க பாராளுமன்ற மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சியுடன், பாஜக கூட்டணி வைத்திருந்தது. இதனையடுத்து கடந்த 2018 ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. அதுநாள் முதல் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறையில் இருந்து வருகிறது.
புல்வாமா தாக்குதல் நடைபெற்ற சில வாரங்களுக்கு பின்னர் மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டு தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்திற்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினர். இந்த நிலையில் மேலும் 6 மாதத்திற்கு குடியரசு தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வழி செய்யும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.