Rahul Gandhi On Coimbatore Annapoorna Hotel Owner Issue: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமரியாதை செய்யப்பட்டிருக்கின்றார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில்,"கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், நமது பொதுமக்களுக்கான ஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறை வேண்டும் என கோரிக்கை வைத்து கேட்கும்போது, அவரது கோரிக்கையை ஆணவத்துடன் மற்றும் முற்றிலும் அவமரியாதையுடன் கையாளப்பட்டுள்ளது.
'கோவை தொழிலதிபருக்கு அவமரியாதை'
ஆனால் மறுபுறம், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்கவும், சட்டங்களை மாற்றவும் அல்லது நாட்டின் தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போதும் மோடி அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார். பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி கடைசியாக இப்போது அவர்கள் அவமானத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
When the owner of a small business, like Annapoorna restaurant in Coimbatore, asks our public servants for a simplified GST regime, his request is met with arrogance and outright disrespect.
Yet, when a billionaire friend seeks to bend the rules, change the laws, or acquire…
— Rahul Gandhi (@RahulGandhi) September 13, 2024
ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்கள் அவமானத்தை ஏற்படுத்தவே நினைக்கிறார்கள். சிறு, குறு வணிகம் மேற்கொள்பவர்கள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்" என்றார்.
மேலும் படிக்க | 4 மாதங்களுக்கு பின் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... என்ன விஷயம் தெரியுமா?
தனிப்பட்ட வீடியோ வைரல்
கோவையில் இரண்டு நாள்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் என்பவர் கேள்விகளை எழுப்பினார். உணவகத்தின் உரிமையாளர் எழுப்பிய கேள்விகளின் வீடியோ நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை நேரில் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார். சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் பேசும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பதிவிடப்பட்டது.
இந்த வீடியோதான் தற்போது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை அழைத்து நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டினர். இதைத் தொடர்ந்து தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் - சீனிவாசன் உரையாடல்
நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்து அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் பேசிய வீடியோவில் பின்வரும் விஷயங்கள் பதிவாகியிருந்தன. அதில் சீனிவாசன்,"அசோசியேசன் சார்பில் பேச சொன்னார்கள். நான் மீட்டிங்கிற்கு கூட வரவில்லை என்றே சொன்னேன். அதன்பின், பேச வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. நீங்க வயதில் பெரியவர், மன்னித்து விடுங்கள். நான் எந்த கட்சியிலும் இல்லை.
ஒரு தாழ்மையான வேண்டுகோள், தமிழகத்தில் சின்ன கடையோ, பெரிய கடையோ அனைத்து கடைகளை சேர்ந்தவர்களையும் அழைத்துதான் ஒரு மீட்டிங் போடுகிறோம். அதில் நீங்கள் கலந்து கொண்டீர்கள் என்றால் சந்தோஷமாக இருக்கும். எனது தந்தை சுதந்திரப் போராட்ட தியாகியாக இருந்தவர். நான் உங்கள் மனதை கண்டிப்பாக புண்படுத்திவிட்டேன். இரவு எனக்கு முழுவதும் தூக்கம் இல்லை. காலையில் இருந்து நிறைய பத்திரிகையாளர்கள் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை தவிர்த்து விட்டேன்" என பேசினார்.
தொடர்ந்து அந்த வீடியோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,"உள் நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் பற்றி, நல்லதோ கெட்டதோ வெளியில் சொல்லக்கூடாது. எடுத்த எடுப்பில் நீங்கள் உங்கள் எம்எல்ஏவை பற்றி ஜிலேபி சாப்பிடுறாங்க, சண்டை போடுறாங்க, ரெகுலராக வருவாங்க என சொன்னவுடன் என்ன சொல்வது என தெரியவில்லை. ஜிஎஸ்டி பற்றி என்ன கேட்டாலும் பதில் சொல்லியிருப்பேன். அமைச்சர் குழுவினர்தான் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்து ஜிஎஸ்டி குறித்து முடிவு செய்வார்கள்" என பேசியிருந்தார்.
மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை
இது ஒருபுறம் இருக்க, தனிப்பட்ட முறையில் சந்தித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதற்கு அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசனிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்ட தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அவரது X பதிவில்,"உணவக உரிமையாளருக்கும், நிதி அமைச்சருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை சமூகவலைதளத்தில் பதிவேற்றிய பாஜக செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
On behalf of @BJP4TamilNadu, I sincerely apologise for the actions of our functionaries who shared a private conversation between a respected business owner and our Hon. FM.
I spoke with Thiru Srinivasan Avl, the esteemed owner of the Annapoorna chain of Restaurants, to express…
— K.Annamalai (@annamalai_k) September 13, 2024
அன்னபூர்ணா உணவகங்களின் மதிப்பிற்குரிய உரிமையாளரான சீனிவாசன் உடன் நான் தொலைபேசியில் பேசினேன். இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை சீனிவாசன் அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ