வெட்கக்கேடானது.. வெட்கப்படுங்கள் ராகுல் காந்தி.. கபில் மிஸ்ரா பதிலடி

புல்வாமா தாக்குதல் குறித்த ராகுலின் கேள்விக்கு பாஜக கபில் மிஸ்ரா.. "வெட்கக்கேடானது" ராகுல் காந்தி என பதில் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2020, 01:04 PM IST
வெட்கக்கேடானது.. வெட்கப்படுங்கள் ராகுல் காந்தி.. கபில் மிஸ்ரா பதிலடி title=

புது டெல்லி: இன்று நாடு முழுவதும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மரியாதை செலுத்திய முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதல் குறித்து மூன்று கேள்விகளை எழுப்பி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா, "வெட்கக்கேடானது ராகுல் காந்தி.. வெட்கப்படுங்கள்.. இத்தகைய மலிவான அரசியல் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

சரியாக ஒரு வருடம் முன்பு, பிப்ரவரி 14 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் மீது பயங்கரவாத படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலின் முதல் ஆண்டு நினைவு நாளில் முழு தேசமும் துக்கத்தில் மூழ்கியுள்ளது.

ராகுல் காந்தி vs கபில் மிஸ்ரா:

ராகுல் காந்தியின் மூன்று கேள்விகள் பாஜகவை குறிவைத்து கேட்டுள்ளார். முதலில் அவர், கடந்த ஆண்டு நடந்த பயங்கரமான புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்கள் அனைவரும் நம் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளனர். அவர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது எனக் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் 3 கேள்விகளை கேட்டுள்ளார். 

1. இந்த தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார்?

2. தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன?

3. தாக்குதல் நடத்த காரணமாக இருந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசாங்கத்தில் இதுவரை யார் பொறுப்பேற்கவில்லை? இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியின் ட்வீட்டிற்குப் பிறகு, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா, காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுலுக்கு பதிலடி தந்துள்ளார். கபில் மிஸ்ராவின் கேள்வி, 'வெட்கக்கேடானது ராகுல் காந்தி. புல்வாமா தாக்குதலால் பயனடைந்தவர் யார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். இந்திரா-ராஜீவ் படுகொலையால் யார் பயனடைந்தார்கள் என்று நாடு கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள். இத்தகைய மலிவான அரசியல் செய்ய வேண்டாம், வெட்கப்படுங்கள்" எனக் கூறியுள்ளார்

Trending News