வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு ஆட்சியின் விரக்தியால், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலையில் காங்கிரசும், மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பாஜகவும் வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தலை சந்தித்து வருகின்றன.
அதன்படி ஏப்ரல் 11, 18, 23 தேதிகளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், தெலங்கானா, திரிபுரா, சிக்கிம், கோவா, குஜராத், அந்தமான், சட்டீஸ்கர், அருணாச்சல பிரதேசம், அசாம், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் வாரணாசி மக்களவை தொகுதிக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் சிரோமனி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.