இரண்டு நாட்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல், பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு என தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றன. இதேப்போல் தேர்தல் ஆணையமும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு அதிரடி அறிவிப்பபுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவிக்கையில்., தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், காவல், வருமான வரி மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் சந்திப்பும் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா விவகாரத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பொதுமக்களை இடையூறு செய்யகூடாது எனவும் வலியுறுத்தின. தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறை, துணை ராணுவம் ஆகியன தயார் நிலையில் உள்ளன. வெளியில் வர முடியாத அளவுக்கு கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது பூத் சிலிப் மூலம் வாக்காளிக்க முடியாது, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை 2 நாளில் வழங்கப்படும். பெண்கள் மட்டும் நிர்வாகிக்கும் வாக்குச்சாவடிகள் மக்களவை தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படும். விடுபட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.