ஐக்கிய நாடுகள் சபையில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், அதன் இணையதளத்தில் பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான் தூதர், பயங்கரவாதம் குறித்து ஒரு உரை நிகழ்த்தியதாக ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளது. உண்மையில் அதன் தூதர் எந்த உரையும் நிகழ்த்தவில்லை. திங்களன்று ஆன்லைனில் நடைபெற்ற ஐநாவின் மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்கும் பேச்சாளர்களின் பட்டியலில் பாகிஸ்தானும் இல்லை, கூட்டத்தின் வீடியோவில் அதன் பிரதிநிதியான முனீர் அக்ரமும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஆதரவைப் பெறத் தவறிய பாகிஸ்தான், ஐநா பாதுகாப்பு சபையில், பாகிஸ்தான் தூதர் பயங்கரவாதம் குறித்து உரை நிகழ்த்தியதாக கூறி உலக நாடுகளிடம் நற்பெயரை வாங்க திட்டமிட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் போலியான தவறான தகவல்களை முன்வைப்பது பாகிஸ்தானின் பழைய உத்தி. 2017 ஆம் ஆண்டு நடந்த ஐநா கூட்டத்தொடரில், அப்போது பாகிஸ்தானின் பிரதிநிதியாக இருந்த மலிஹா லோதி, காயமடைந்த பாலஸ்தீனிய சிறுமியின் படத்தைக் காட்டி, அவர் ஒரு காஷ்மீர் பெண் என்று நிரூபிக்க முயன்றார். அதில் அம்பலமாகி அசிங்கப்பட்டது பாகிஸ்தான்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பதால், பாகிஸ்தானின் ஐநா பிரதிநிதி தனது அறிக்கையை எங்கு வழங்கினார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆச்சயமாக உள்ளது" என்று பாகிஸ்தானின் பொய்யை இந்தியா அம்பலப்படுத்தியது.
இதில் பாகிஸ்தான் ஒரு படி மேலே போய், ட்விட்டர் மூலமாக பரப்பப்பட்ட அக்ரமின் போலி உரையில், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் ஜமாத் உல் அஹ்ரருக்கு ஒரு 'இந்திய பயங்கரவாத சிண்டிகேட்' ஆதரவு இருப்பதாகவும், புதுடெல்லி 'கூலிப்படை பயங்கரவாதிகளை' பயன்படுத்தியது பற்றி குறிப்பிடுவதைக் காணலாம். இது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல் உள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதற்காக, சர்வதேச நிதி நடவடிக்கை குழு FATF, பாகிஸ்தானை தடை செய்வதாக எச்சரித்துள்ள நிலையில், இந்தியா பயங்கரவாதிகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது, உண்மையிலேயே நகைப்புக்குரியது. அக்ரமின் போலி உரையில் நான்கு பேர்களை குறிப்பிட்டு, அவர்கள் இந்தியர்கள் என்றும், ஐ.நா. பொருளாதாரத் தடைகளின் கீழ் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர அவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன என்றும் கூறினார்.
தடைசெய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் தகவல் அடங்கிய பாதுகாப்பு கவுன்சிலின் 1267 குழுவின் பட்டியல், அனைவரும் பார்க்கும் வகையில் பொதுவில் உள்ளது. அதில் எந்த இந்தியர்களும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஐநாவில் நிகழ்த்திய உரையில் தனது நாட்டிற்குள் 40,000 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாக ஒப்புக் கொண்டார். தடைசெய்யப்பட்ட பல பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானுக்குள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அல்-கொய்தாவை ஒழித்ததாக கூறும் அக்ரமின் தவறான கூற்றையும் இந்தியா நிராகரித்தது. மேலும் அல்-கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் சகல விதமான வசதிகளுடன் வசித்து வந்தார் என்பதை உலகம் அறியும். அவரை பாகிஸ்தான் பாதுகாத்து வந்தது.
மேலும் 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 23 சதவிகிதமாக இருந்த சிறுபான்மை மக்கள் தொகை தற்போது வெறும் 3 சதவீதமாக குறைந்துள்ளது என்று இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | நேபாளத்தை தடையின்றி ஆக்கிரமிக்கும் சீனா.. மவுனம் சம்மதம் என்கிறாரா பிரதமர் ஒளி..!!