திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் 'நிபா' வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. 2018-ல் கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நிபா' வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் கொண்டது ஆகும். இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும். பன்றிகள், வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவும்.
கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே 'நிபா' வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அங்கு 'நிபா' வைரஸ் தாக்குதல் காரணமாக சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். கோழிக்கோடு அருகே நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 'நிபா' வைரஸ் காரணமாக பலியாகி உள்ளார்.
நேற்று இரவு 'நிபா' வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன் இன்று காலை ரிசல்ட் வருவதற்குள் உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்துள்ளான். மிகவும் மோசமான உடல்நிலையுடன்தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ல் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இதே 'நிபா' வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. அப்போது கோழிக்கோடு மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு,இந்த நிபா பரவல் காரணமாக கேரளாவில் 17 பேர் பலியானார்கள். அதன்பின் மீண்டும் கேரளாவில் 2019-ல் 'நிபா' வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.
ஆனால் அப்போது பெரிய அளவில் இதனால் யாருக்கும் பாதிப்பு அடையவில்லை. ஆனால் தற்போது மீண்டும் அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டு இருப்பது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இது சிக்கலாக முடிந்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலை சரியாக கட்டுப்படுத்தவில்லை என்று விஜயனுக்கு எதிராக கேரளாவில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் வைத்து வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று விஜயனுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றன.
தேசிய அளவில் பதிவாகும் கொரோனா கேஸ்களில் 70 சதவீத கேஸ்கள் கேரளாவில் இருந்துதான் பதிவாகி வருகிறது. கேரளாவில் தற்போது பாசிட்டிவ் டிபிஆர் சதவிகிதம் 19.3% ஆக உள்ளது. அதாவது 100 பேரை சோதனை செய்தால் கிட்டத்தட்ட 20 பேருக்கு அங்கு கொரோனா ஏற்படுகிறது. அந்த அளவிற்கு கேரளாவில் மோசமான நிலை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு பலியான சிறுவனின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் காண்டாக்ட் டிரேசிங் முறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிறுவன் தொடர்பு கொண்ட நபர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதனால் கேரளாவில் ஒரு விதமான பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலகில் எங்கும் இதற்கு சிகிச்சை முறை என்ன?என்றும் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேபோல் வேக்சினும் இதற்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மக்கள் இடையே கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ அதிர்ச்சித் தகவல்: தமிழகத்தில் குழந்தைகள் இடையில் வேகமாக பரவுகிறதா கொரோனா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR