புது டெல்லி: நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குரங்கு அம்மையை நிர்வகிப்பது தொடர்பாக தற்போதுள்ள வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து உயர்மட்ட சுகாதார நிபுணர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 9 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் இந்த தொற்றால் இறந்தார். தேசிய தலைநகரில் புதன்கிழமை 31 வயதான பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண் குரங்கு அம்மையால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இதுவரை உறுதி செய்யப்பட்ட 9 நோயாளிகளில் நால்வர் டெல்லியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள ஐந்து பேரது தொற்று கேரளாவில் இருந்து பதிவாகியுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சந்திப்பு "ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்வதற்கான தொழில்நுட்ப கூட்டம்" என்று ஒரு அதிகாரி கூறினார். இந்த கூட்டத்தில் அவசர மருத்துவ நிவாரண இயக்குனர் டாக்டர் எல் சுவஸ்திசரண் தலைமையில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
தற்போதுள்ள 'குரங்கு அம்மை நோயை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களின்' படி, கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்ற வரலாற்றைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு விவரிக்க முடியாத கடுமையான சொறி மற்றும் வீக்கம் நிணநீர் முனைகள், காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களாக கருதப்பட வேண்டும்.
'சாத்தியமான நோயாளி' என்பவர் சந்தேகத்திற்கிடமான நோயாளிக்கான வரையறைக்குள் வரும் நோயாளியாக இருப்பார். சரியான பிபிஇ கிட்கள் இல்லாத சுகாதாரப் பணியாளர்கள் உட்பட, பாதிக்கப்பட்ட நபருடன் தோல் ரீதியான தொடர்பு, நேரடி உடல் தொடர்பு, பாலியல் தொடர்பு அல்லது பாதிக்கப்பட்ட நபரது ஆடை, படுக்கை அல்லது பாத்திரங்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் நோய்க்கு சாத்தியமானவர்களாக கருதப்படுவார்கள்.
மேலும் படிக்க | கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை; பீதியை கிளப்பும் Monkeypox
பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (PCR) மற்றும்/அல்லது சீக்வென்சிங் மூலம் வைரஸ் டிஎன்ஏவின் தனித்துவமான வரிசைகள் கண்டறியப்பட்டால், அந்த நோயாளிகளுக்கு குரங்கு அம்மை வைரஸ் இருப்பது ஆய்வகம் மூலம் உறுதி செய்யப்படும்.
தொடர்புகள் பற்றிய வரையறையில், ஒரு நபருக்கு தொற்றின் முதல் அறிகுறி வந்தது முதல், அந்த நபருக்கு ஏற்பட்ட சொறி சிரங்கு அனைத்தும் உதிரும் வரை, அந்த நபருடன் நேருக்கு நேராக அணுகல், உடலுறவு உட்பட உடல் ரீதியான தொடர்பு, பாதிக்கப்பட்ட நபரால் பயன்படுத்தப்பட்ட ஆடை அல்லது படுக்கை போன்ற பொருட்களுடன் தொடர்பு ஆகியவற்றை கொண்டவர்கள், நோயாளியின் தொடர்புகளாவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடு, பணியிடம், பள்ளி/நர்சரி, பாலியல் தொடர்புகள், சுகாதாரம், வழிபாட்டு இல்லங்கள், போக்குவரத்து, விளையாட்டு, சமூகக் கூட்டங்கள் போன்ற இடங்களில் தாங்கள் தொடர்பு கொண்டிருக்கக்கூடிய நபர்கள் பற்றி நோயாளிகளிடம் கேட்கப்படலாம்.
நோய்த்தொற்று காலத்தில் நோயாளி அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் கடைசியாக தொடர்பு கொண்டதிலிருந்து 21 நாட்களுக்கு, தொடர்பு கொண்ட நபருக்கு ஏதாவது அறிகுறி தோன்றுகிறதா என்பது தினமும் கண்காணிக்கப்பட வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவ / ஆய்வக மதிப்பீடு தேவை.
அறிகுறியற்ற தொடர்புகள், அவர்கள் கண்காணிப்பில் இருக்கும் போது இரத்தம், செல்கள், திசு, உறுப்புகள் அல்லது விந்து ஆகியவற்றை தானம் செய்யக்கூடாது. ப்ரீ ஸ்கூல் குழந்தைகள் தினப்பராமரிப்பு, நர்சரி அல்லது பிற குழு அமைப்புகளுக்கு செல்லக்கூடாது.
மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுதல் முதன்மையாக பெரிய சுவாசத் துளிகள் மூலம் நிகழ்கிறது என்று அமைச்சக வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. பொதுவாக நீண்ட நெருங்கிய தொடர்பு தேவைப்படுகிறது. உடல் திரவங்கள் அல்லது காயங்களுடனான நேரடி தொடர்பு மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை அல்லது பயன்படுத்திய பொருட்களுடன் மறைமுக தொடர்பு மூலமும் இது பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளை கடித்தல் அல்லது கீறல் அல்லது புஷ்மீட் தயாரிப்பதன் மூலம் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவலாம்.
மங்கி பாக்ஸ் நோயின் இன்குபேஷன் அதாவது அடைகாக்கும் காலம் பொதுவாக ஆறு முதல் 13 நாட்கள் வரை இருக்கும். இதன் இறப்பு விகிதம் வரலாற்று ரீதியாக பொது மக்களில் 11 சதவீதம் வரையிலும் குழந்தைகளிடையே அதிகமாகவும் உள்ளது. சமீபத்திய காலங்களில், தொற்று இறப்பு விகிதம் மூன்று முதல் ஆறு சதவீதம் வரை உள்ளது.
அறிகுறிகள் பொதுவாக காய்ச்சல் தொடங்கியதிலிருந்து ஒன்று முதல் மூன்று நாட்களுக்குள் கொப்பளங்கள் போன்ற புண் தொடங்கி, இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். இவை சரியாகும் வரை அரிப்பு மற்றும் வலி இருக்கும் என கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
குரங்கு அம்மை நோய் என்றால் என்ன?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குரங்கு அம்மை நோய் என்பது ஒரு வைரஸ் ஜூனோசிஸ், அதாவது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும். இதன் அறிகுறிகள் பெரியம்மை போல இருந்தாலும், இதன் தீவிரம் குறைவாக இருக்கும். குரங்கு அம்மை பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் முனைகளுடன் வெளிப்படுகிறது. இவை பல மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் அறிகுறிகளுடன் கூடிய சுய-வரம்பிற்குட்பட்ட நோயாகும்.
இறந்த அல்லது உயிருள்ள காட்டு விலங்குகள், எலிகள் மற்றும் அணில் போன்ற கொறித்துண்ணிகள் மற்றும் குரங்குகள் போன்ற பாலூட்டிகள் ஆகியவற்றுடன் தொடர்பைத் தவிர்க்க சர்வதேச பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ