உத்திரபிரதேசத்திற்கு உட்பட்ட நொய்டா-வில் சமீபத்தில் ஒரு துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் நொடி பொழுதில் BMW கார் லாவகமாக திருடப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி இங்கு BMW காரை ஓட்டிச் சென்ற நபர், சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக இடைநிறுத்தியுள்ளார். அதன் போது அடையாளம் தெரியாத சில குற்றவாளிகள் காரை எடுத்து தப்பிச்சென்றதாக தெரிகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு பிரிவு 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் பங்கு தரகர் ரிஷாப் அரோரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சொகுசு கார் அரோராவின் மைத்துனருக்கு சொந்தமானது மற்றும் வாகனத்தின் மீது இன்னும் ₹40 லட்சம் கடன் நிலுவையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நொய்டா துணை காவல்துறை ஆணையர் ஹரிஷ் சந்தர் தெரிவிக்கையில்., "ஒரு நபரின் BMW கார் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து மூத்த அதிகாரிகள் உட்பட காவல்துறை படை அந்த இடத்தை அடைந்தது" என தெரிவித்துள்ளார். மேலும் அரோரா காரை நடுப்பகுதியில் நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க வெளியே வந்துள்ளார். இதற்கிடையில், அடையாளம் தெரியாத சில குற்றவாளிகள் சம்பவ இடத்தை அடைந்து வாகனத்தை தட்டி சென்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த கொள்ளை காரின் உரிமையாளருக்குத் தெரிந்த ஒருவரால் திட்டமிடப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் காரின் உரிமையாளருக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிகப்படும் பட்சத்தில் இந்த வழக்கில் பல கோண விசாரணை தேவைப்படுவதாகவும் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் வாகன் விரைவில் மீட்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.