புதுடில்லி: 2019 மக்களவை தேர்தல் (Lok Sabha Elections 2019) நடைபெற்ற 542 தொகுதிகளின் லோக் சபா தேர்தல் முடிவுகள் (Lok Sabha Election Results 2019) நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் பெரிய மோடி அலையின் காரணமாக பா.ஜ.க மீண்டும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் 2019 தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது, 2014-ல் பெற்ற இடங்களை விட அதிகமான இடங்களை பி.ஜே.பி கைப்பற்றியுள்ளது. மோடியின் கவர்ந்திழுக்கும் பேச்சால் லோக் சபா தேர்தலில் 2019 தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க பெரும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மச்லிசேர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தேர்தல் போட்டியிட்ட போட்டியாளர்களிடையே வெற்றி மற்றும் தோல்வியின் வேறுபாடு வெறும் 181 வாக்குகள் மட்டுமே. இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொலநாத் சரோஜ் 4,88,397 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதே சமயம், அக்லேஷ்-மாயாவதி கூட்டணி (SP-BSP) சார்பாக போட்டியிட்ட பிஎஸ்பி வேட்பாளர் திரிவேய் ராம் 4,88,216 வாக்குகளைப் பெற்றுள்ளார். மொத்த வாக்குகளில் 47.19 சதவிகிதம் பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு கிடைத்தது. அதேபோல பி.எஸ்.பி வேட்பாளருக்கு 47.17 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.
இரு வேட்பாளர்களுக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 0.02 சதவீதமாகும். அதே நேரத்தில், இந்த தொகுதியில் 10,830 வாக்குகள் நோட்டாவுக்கு போடப்பட்டு உள்ளது. நோட்டவுக்கு செலுத்திய வாக்குகளின் மொத்த சதவீதம் 1.05 ஆகும். நோட்டவுக்கு போட்ட வாக்குகளை இந்த இருவருக்கும் போட்டிருந்தால் வெற்றி, தோல்வியில் மாற்றம் ஏற்ப்பட வாய்ப்பாக அமைந்திருக்கும்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் 63 இடங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.