கொல்கத்தா கொடூரம்: பேச்சுவார்த்தைக்கு கறார் காட்டும் மருத்துவர்கள் - முன்வைக்கும் டிமாண்ட் என்ன?

Kolkata Rape And Murder Case: கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 11, 2024, 08:43 PM IST
  • ஆக. 9ஆம் தேதி அந்த கொலை நடந்தது
  • இன்று 33ஆவது நாளிலும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது
  • போராட்டத்தால் பல நோயாளிகள் பாதிக்கப்படுவதாக அரசு தரப்பு கவலை
கொல்கத்தா கொடூரம்: பேச்சுவார்த்தைக்கு கறார் காட்டும் மருத்துவர்கள் - முன்வைக்கும் டிமாண்ட் என்ன? title=

Kolkata Rape And Murder Case Latest News Updates: கொல்கத்தாவில் உள்ள அரசின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ஆம் தேதி அன்று முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியும், ஜூனியர் மருத்துவருமான ஒரு 31 வயது பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. கொல்கத்தா நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லி உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தற்போது சஞ்சய் ராய் என்பவரை மட்டும் கைது செய்து விசாரணையில் வைத்துள்ள சிபிஐ, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக இவரை குறிப்பிடுகிறது. சஞ்சய் ராய் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய தன்னார்வ பணியாளர் ஆவார்.

33ஆவது நாளாக போராட்டம் 

தொடர்ந்து, சஞ்சய் ராய் மட்டுமின்றி இந்த சம்பவம் நடந்தபோது மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்து சந்தீப் கோஷ், சம்பவம் நடந்த இரவில் பாதிக்கப்பட்ட பெண் கடைசியாக பார்த்த நான்கு மருத்துவர்கள் ஆகியோரை சிபிஐ உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், ஆர்.ஜி. கர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கொல்கத்தா கொடூரம்: பலியான பெண்ணின் பெற்றோருக்கு வந்த 3 கால்கள்... நீடிக்கும் மர்மம்?

கடந்த ஆக. 9ஆம் தேதி முதல் தொடர்ந்து 33 நாளாக இன்று வரை மருத்துவர்கள் பலரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணிக்கு திரும்ப வேண்டி அரசு தரப்பில் இன்று பேச்சுவார்த்தைக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவ செயலாளர் நாராயணம் ஸ்வரூப் நிகாம் தரப்பில் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து மருத்துவர்கள் அதனை நிராகரித்தனர். ஏனென்றால், அவரையும் ராஜினாமா செய்யக்கோரி மருத்துவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 

நேரடி ஒளிப்பரப்பு வேண்டும்

இதனை தொடர்ந்து, மேற்கு வங்க தலைமை செயலாளர் மனோஜ் பண்ட் மருத்துவர்களுக்கு இன்று (செப். 11) கடிதம் ஒன்றை எழுதினார். அதாவது, மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவதாகவும் எனவே 12-15 நபர்கள் அடங்கிய பேச்சுவார்த்தை குழு தலைமை செயலகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். 

தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை தொடர்ந்து மருத்துவர்கள் தரப்பில் பதில் கடிதம் வழங்கப்பட்டது. அதில் மருத்துவர்கள் தரப்பில் இருந்து 30 பேர் அடங்கிய குழுவைதான் பேச்சுவார்த்தைக்கு அனுப்புவோம் என்றும் அனைத்து தரப்புகளின் வெளிப்படத்தன்மைக்காக பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதிலும் முக்கியமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முன்னிலையில்தான் தங்களின் ஐந்து அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | கொல்கத்தா பெண் கொலையான நேரத்தில்... கல்லூரி முதல்வராக இருந்தவர் கைது - பின்னணி என்ன?

5 அம்ச கோரிக்கைகள் என்னென்ன?

மருத்துவர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளில் முதன்மையானது, பெண் மருத்துவரின் கொலைக்கு காரணமானவர்களையும், அதன் தடயங்களை அழித்தவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

அதேபோல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீது ஒழுங்கு நடத்தை எடுக்க வேண்டும்; கொல்கத்தா காவல் கண்காணிப்பாளர் வினீத் கோயல் மற்றும் மருத்துவ செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் ஆகியோரை ராஜினாமா செய்ய வேண்டும்; சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகளை அடுக்கி உள்ளனர். அரசின் சுகாதார நிறுவனங்களில் நிலவும் அச்சுறுத்தும் கலாச்சாரத்தை போக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அரசு தரப்பில் இருந்து நேற்று பேச்சுவார்த்தைக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மருத்துவர்கள் நிராகரித்த நிலையில், மேற்கு வங்க அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை செயலகத்தில் காத்திருந்தார் எனவும் ஆனால் யாரும் அங்கு வரவில்லை என்றும் கூறினார்.

அமைச்சர் கூற்றுக்கு மறுப்பு

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் ஊடகம் ஒன்றிடம் இன்று கூறுகையில்,"நேற்று எங்களுக்கு தலைமை செயலாளரிடம் இருந்து வந்த கடிதம், அரசு மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது, அதுவும் அந்த மூடிய கதவுகளுடனான பேச்சுவார்த்தை என்றும் தெரிவிக்கப்ட்டது. எனவே அந்த கூட்டத்திற்கு வர மறுத்துவிட்டோம்.

முதலமைச்சர் எங்களுக்காக காத்திருந்தார் என அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறியது போல், எதுவும் எங்களுக்கு வந்த மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை, அதிகாரிகள் உடன்தான் பேச்சுவார்த்தை என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு முதல்வர் அலுவலகத்திற்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்பினோம், அதில் எங்களது ஐந்து கோரிக்கைகளை குறிப்பிட்டோம்" என்றார். மருத்துவர்களின் போராட்டத்தை முடித்துவைக்க அரசு வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்குமா, மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | குற்றவாளிக்கு பத்து நாள்களில் தூக்கு... விரைவில் புதிய சட்டம் - சிபிஐயையும் கிழித்தெடுத்த மம்தா பானர்ஜி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News