Oommen Chandy Passes Away: கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலமானார். அவருக்கு வயது 79. அவரின் இறப்பு செய்தியை அவரின் மகன் பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். "அப்பா காலமாகிவிட்டார்" என அந்த பதிவில் அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு முறை கேரள முதலமைச்சராக உம்மன் சாண்டி பதவி வகித்தார். உம்மன் சாண்டியின் மரணத்தை அடுத்து, இரண்டு நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பதாக கேரளா அரசு அறிவித்திருந்தது. இன்று ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உம்மன் சாண்டி மகனின் பேஸ்புக் பதிவு:
யார் இந்த உம்மன் சாண்டி?
2004-06 மற்றும் 2011-16 ஆகிய காலகட்டங்களில் இரண்டு முறை உம்மன் சாண்டி கேரள முதலமைச்சராக பதவி வகித்தார். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உம்மன் சாண்டி வெற்றி பெற்றுள்ளார்.
1970ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான் முதன்முதலாக புதுப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினராக சாண்டி தேர்வானார். 1977இல் கே.கருணாகரன் அமைச்சரவையில் முதல்முறையாக அமைச்சரானார். அதன் இரண்டு முறை முதல்வராக பணியாற்றினார். அவர் மாநிலத்தில் நிதி இலாகாவை கவனித்தார், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். உம்மன் சாண்டிக்கு மரியம்மா என்ற மனைவியும், மரியா உம்மன், சாண்டி உம்மன், அச்சு உம்மன் ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
கேரள முதல்வர் உருக்கம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பினராயி விஜயனின் இரங்கல் பதிவில்,"நாங்கள் இருவரும் ஒரே ஆண்டில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதே கட்டத்தில்தான் மாணவ பருவத்தின்போது அரசியல் வாழ்வுக்கு வந்தோம். ஒரே நேரத்தில் பொதுவாழ்க்கையை முன்னெடுத்தோம். அவரிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினம். உம்மன் சாண்டி திறமையான நிர்வாகியாகவும், மக்கள் வாழ்வில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார்" என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் இரங்கல்
கேரள காங்கிரஸ் கட்சியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. "எங்கள் மிகவும் அன்புக்குரிய தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டிக்கு மிக சோகமான விடைபெறும் நிகழ்வு நடந்துவிட்டது. கேரளாவின் மிகவும் பிரபலமான மற்றும் ஆற்றல் மிக்க தலைவர்களில் ஒருவரான சாண்டி, பல்வேறு தலைமுறைகள் மற்றும் பலதரப்பு மக்களால் நேசிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி அவரது தலைமையையும் ஆற்றலையும் இழக்க நேரிடும்" என கேரள காங்கிரஸ் ட்விட்டரில் தெரிவித்தது.
Extremely sad to bid farewell to our most beloved leader and former CM Shri. Oommen Chandy. One of the most popular and dynamic leaders of Kerala, Chandy sir was loved across generations and sections of the population. The Congress family will miss his leadership and energy. pic.twitter.com/YaeywDOKwd
— Congress Kerala (@INCKerala) July 18, 2023
கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் அவரது இரங்கல் பதிவில்,"அன்பின் சக்தியால் உலகையே வென்று சாதனை படைத்த மன்னனின் கதை, அதன் வேதனையான முடிவைக் காண்கிறது. இன்று, உம்மன் சாண்டி என்ற ஒரு ஜாம்பவானின் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன். அவர் எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தினார். அவருடைய மரபு என்றென்றும் நம் உள்ளத்தில் எதிரொலிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சண்டை எதுக்கு? சமாதனமா போங்கப்பா! டெல்லி அரசுக்கும் ஆளுநருக்கும் சமரசம் செய்யும் SC
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ