கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!!
பிரதமர் மோடி, தொடர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, நேற்று கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து அங்குள்ள புனித குகையில் தியானம் செய்தார். இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கேதார்நாத் புனித குகையில் தியானம் செய்தது எனக்கு மன அமைதியை தந்தது. இதன் மூலம் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். கேதார்நாத்தில் எனக்குத் தேவையானவற்றை வீடியோ காட்சிகள் மூலமாக சேகரித்து வருகிறேன். நாட்டில் நடப்பதில் இருந்து விலகிய ஆன்மிக பயணமாக உத்தரகாண்ட் வந்துள்ளேன். நாம் மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக படைக்கப்பட்டுள்ளோம்; எடுப்பதற்காக அல்ல.
நாட்டு மக்களும் கேதார்நாத் வந்து மன அமைதி பெற்று பயன் பெற வேண்டுகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற ஏரளாமான புகழ்பெற்ற ஆன்மீக தலங்கள் இருக்கின்றன. நாட்டு மக்கள் இதுபோன்ற இடங்களுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கோவிலில் வழிபடும் போது எனக்காக எதையும் நான் கேட்பதில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.