சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்ப்பட்டது. அதில் பாஜக ஒரு மாநிலத்திலும் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இரண்டு மாநிலங்களில் மாநில கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதில் மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணிக் கட்சியும், தெலங்கானாவில் தெலுங்கான ராஷ்டிரிய சமித்தி கட்சியும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 28, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது. நேற்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. கடந்த 23 மணிநேரமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை இன்று தான் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜகா 109 இடங்களிலும், பிஎஸ்பி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றன என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி தோல்வியை தழுவியது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ராஜஸ்தான் | 200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு டிசம்பர் 7, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது. 199 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. இறுதியாக காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜகா 73 இடங்களிலும், பிஎஸ்பி 6 இடங்களிலும், மற்றவர்கள் 21 இடங்களில் வெற்றி பெற்றனர். இதன்மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி, காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிப்பலிக்குமா? என கேள்வி எழுப்பப்படுகிறது.
தெலங்கானா | 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்தில் டிசம்பர் 7, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது. டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆரம்ப முதலே முன்னணி பெற்று, இறுதியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. டிஆர்எஸ் 88, காங்கிரஸ் 21, பாஜக 1, மற்றவர்கள் 9 என தொகுதிகளை கைப்பற்றினர். அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த மாநிலத்தை பொருத்த வரை இந்த தேர்தலில் தேசிய கட்சிகள் தங்கள் பலத்தை நிருபிக்க முடியவில்லை. மாநில கட்சிகளின் கைகளே ஓங்கி இருந்தது.
சத்தீஷ்கர் | 90 தொகுதிகள் கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த நவ., 12 மற்றும் நவ., 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெற்றது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வந்தது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 68 தொகுதியிலும், பாஜக 15 தொகுதியிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி7 தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. அதேவேளையில் 15 ஆண்டுகளாக தங்களிடம் இருந்த ஆட்சியை பறிக்கொடுத்தது பிஜேபி.
மிசோரம் | 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 28, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இந்த மாநிலத்தை பொருத்த வரை கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்முறை நடைபெற்ற மிசோரம் மாநில தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் போட்டியிட்டது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மிசோ தேசிய முன்னணிக் கட்சி அதிக இடங்களை பெற்றது. மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 இடங்களின் பெரும்பான்மை வேண்டும் என்ற நிலையில், மிசோ தேசிய முன்னணிக் கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்த மாநிலத்திலும் மாநில கட்சியின் கை ஓங்கி உள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, மூன்று மாநிலத்தில் பாஜக ஆட்சியும், ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்று வந்தது. தேர்தல் முடிந்துள்ள நிலையில், அனைத்து மாநிலத்திலும் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் பாஜகவிடம் இருந்த மூன்று மாநிலங்களையும் கைப்பற்றி உள்ளது.