காஷ்மீர் குறித்து டிரம்பிடம் பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை: ஜெய்சங்கர் விளக்கம்

காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படி அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி எதுவும் கூறவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 24, 2019, 01:54 PM IST
காஷ்மீர் குறித்து டிரம்பிடம் பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை: ஜெய்சங்கர் விளக்கம் title=

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கு இடையிலானது. இந்த பிரச்சனை குறித்து இருநாடுகளும் தான் பேச முடியும். இதில் மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மூன்றுநாள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப், " காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படியும், உதவ முன்வருமாறும் பிரதமர் மோடி, தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும், தேவைப்பட்டால் இந்தியா - பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு நடத்த தாம் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாகவும் டிரம்ப் கூறினார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது. பிரதமர் மோடி உதவும்படி கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறியதையும் இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையீட்டை இந்தியா கொள்கையளவில் விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை அரசு மாற்றிக் கொண்டதா? என மத்திய அரசிடம் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது. மேலும் இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. 

இன்றும் இந்த விவகாரம் குறித்து இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பினார்கள். பிரதர் மற்றும் டிரம்ப்க்கும் இடையேயான சந்திப்பில் என்னென்ன நடந்தது என்பதை மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது, காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கு இடையிலானது. இந்த பிரச்சனை குறித்து இருநாடுகளும் தான் பேச முடியும். இதில் மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை. மேலும் 3 வது நாடு தலையிடவும் முடியாது எனக் கூறினார். மேலும் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோடி அவர்கள் அதிபர் டிரம்பிடம் எதுவும் கூறவில்லை என விளக்கம் அளித்தார்.

Trending News