பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!!
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாடோல் பகுதியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டம் குறித்து பேசி மோடியை விமர்சித்தார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில்; பழங்குடியின மக்களை காவல்துறையினர் சுட்டுக்கொல்வதற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை மோடி இயற்றியுள்ளார். அந்த சட்டத்தின் படி, பழங்குடியினமக்களை தாக்கலாம், உங்கள் நிலங்களை அவர்கள் பறிக்கலாம், வனங்களை விட்டு வெளியேற்றலாம் , உங்களின் குடிநீரை அபகரிக்கலாம், பழங்குடியினர்களை சுடவும் செய்யலாம் என்று அந்த சட்டம் சொல்கிறது” என்று கூறினார்.
ராகுலின் இந்தப் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என பாஜக நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து பிரதமர் குறித்து பேசியதற்காக 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.