இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கே.சிவன், (K.Sivan) இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) நிறுவனத்தில் விஞ்ஞானியாக 1982ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த இவர், பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் செலுத்துவதில் முக்கியப் பணி ஆற்றினார். இந்தியாவிலிருந்து கடந்த 33 ஆண்டுகளாக ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் கே.சிவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கே.சிவன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி, அவர் 2022 ஜனவரி 14ஆம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கே.சிவன், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளி திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவின் சாதனை திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டப்பணியில், கே.சிவன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது உட்பட விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ தலைவர் கே.சிவன், சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
ALSO READ | ஜனவரி 2 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR