நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக அமோகமான வெற்றி பெற்றுது. அதேசமயம் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதன்படி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 325 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலமாக, அக்கட்சி ஆட்சியமைப்பதும் உறுதியாகியுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி 54 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜகவே முன்னிலை பெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சி, மொத்தம் உள்ள 117 தொகுதிகளில், 77 இடங்களில் முன்னிலை பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி, 20 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலமாக, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. பாஜக 18 இடங்களே கிடைத்தன.
மணிப்பூர் மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 13 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
இந்நிலையில் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், மணிப்பூர், கோவா மாநிலங்களில் வெற்றி பெற்றதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.