Dhuruv Rathee: 18வது மக்களவை தேர்தல் முடிவுகள் (Lok Sabha Election Result 2024) நேற்று வெளியாகின. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள், பல்வேறு தேர்தல் வல்லுநர்கள் மற்றும் கணிப்பாளர்கள் என பலரின் கணிப்புகளும் நேற்று தவிடுபொடியானது. அனைவருமே பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்த சூழலில், பாஜக தற்போது 240 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி பெரும்பான்மையை பெற தவறியது.
இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சந்திராபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்டவையின் ஆதரவின் பேரில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படலாம். காங்கிரஸ் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இம்முறை மக்களவையில் அமரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தேர்தல் வல்லுநர்களின் கணிப்புகள் மட்டுமின்றி மோடி - ஷா வியூகங்களும் வீழ்ச்சியை கண்டன எனலாம்.
இந்தி ஹோட்லேண்டில் இந்தியா கூட்டணி...
கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து மோடி - ஷா வியூகங்கள்தான் பாஜகவை அசைக்க முடியாத கட்சியாக உருவெடுக்க வைத்தது எனலாம். இருப்பினும் இந்த முறை 400 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று வரலாற்றில் வெற்றியை பதிவு செய்யும் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். கடந்த முறை 303 தொகுதிகளை கைப்பற்றியதால் இம்முறை அதைவிட அதிக தொகுதிகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க | மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!
ஆனால், காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியில் (INDIA Alliance) இருக்கும் கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் மேற்கொண்ட பிரச்சாரம் இம்முறை அவர்களுக்கு கைக்கொடுத்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட பல தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கு கிடைத்தது. இருப்பினும் மிக மிக சர்ப்ரைஸானது என்னவென்றால், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி பெற்ற தொகுதிகளாகும். உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 43 இடங்களை இந்தியா கூட்டணி வென்றது. பாஜக அங்கு கடந்த முறை 60க்கும் மேலான இடங்களை கைப்பற்றிய நிலையில் இந்த முறை 36 இடங்களே கிடைத்துள்ளது.
இந்திய கூட்டணி வெற்றிக்கு முக்கியமானவர்
இதற்கு முக்கிய காரணம் சமாஜ்வாதி கட்சி களத்தில் ஆற்றிய பணிகள், ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி ஆகியோர் மேற்கொண்ட பிரச்சாரம், அதிலும் ராகுல் காந்தியின் யாத்திரைகள் என பல விஷயங்களை கூறலாம். ஆனால், உத்தர பிரதேசத்தில் மட்டுமின்றி ஹிந்தி ஹாட்லேண்டில் பாஜகவின் பின்னடைவுக்கும், காங்கிரஸின் வெற்றிக்கும் இவர்களை தவரி முக்கியமான மற்றொருவரும் இருக்கிறார், அவர் பெயர் துருவ் ராதி என்ற யூ-ட்யூபர் ஆவார்.
சமூக வலைதளங்களையும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, பாஜக எப்படி 2014ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதோ அதேபாணியில் யூ-ட்யூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை கச்சிதமாக பயன்படுத்தி துருவ் ராத்தி பாஜகவை பல விஷயங்களை பலவீனப்படுத்தியுள்ளார் எனலாம். பல சர்வதேச பத்திரிகைகளும் இவரை தற்போது தலைப்புச் செய்தியாக்கி உள்ளன.
யார் இந்த துருவ் ரத்தி?
துருவ் ராத்தி ஜெர்மனி வாழ் இந்தியர் ஆவார். இவர் பாஜக அரசின் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன், சரியான கருத்துக்களுடன் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவருக்கு இந்தியாவில் மட்டும் 4.76 கோடிக்கும் மேலான வியூவர்ஸ் இருக்கின்றனர். இவரின் மோடி: தி ரியல் ஸ்டோரி என்ற வீடியோ சுமார் 27 மில்லியன் பார்வைகளை பெற்றது.
இவரின் வீடியோக்கள் இந்தியில் வந்தாலும், ஆங்கில சப்டைட்டிலின் மூலம் நாடு முழுவதும் உள்ள பல மக்களிடம் சென்றடைந்தார் எனலாம். உண்மை சரிபார்த்தால், அனைத்தையும் கேள்விக்குட்படுத்துவது, முக்கிய பிரச்னைகளை விளக்குவது என பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் விரிவாகவும் எளிமையாகவும் வீடியோ பதிவிடுவது இவரின் சிறப்பாகும்.
அதாவது, மைய நீரோட்டத்தில் இருக்கும் ஊடகங்கள் தவறவிட்ட இடத்தை இதுபோன்ற தன்னார்வ யூ-ட்யூபர்கள் சரியாக நேரத்தில் நிரப்பியிருக்கின்றனர் என இவருக்கு பெரும் பாராட்டுகள் நேற்றில் இருந்து குவிந்து வருகிறது. யூ-ட்யூப், வாட்ஸ்அப், பேஸ்புக் மட்டுமின்றி ஷார்ட் வீடியோஸ் வரும் சமூக வலைதளங்களில் இவரின் வீடியோ அதிகளவில் வைரலானது.
துருவ் ரத்தி நேற்றைய தேர்தல் முடிவுகளுக்கு பின் சமூக வலைதளங்களில் ஒரு பதிவை போட்டியிருந்தார். அதில்,"ஒரு தனி மனிதனின் சக்தியை என்றும் குறைத்து மதிப்பிடாதீர்கள்" என பதிவிட்டிருந்தார். ஆம், இனி வரும் தேர்தல்களில் இதுபோன்ற சமூக வலைதளங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் கூடுதல் கவனம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ