மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் வங்கியான பந்தன் வங்கி. பந்தன் வங்கி பங்குகள் நேற்று முதல் முறையாக பங்குச்சந்தையில் பட்டியலாயின. நேற்றைய வர்த்தகத்தில் 27% உயர்ந்து 476 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் இடையே அதிகபட்சம் 499 ரூபாய் (33%) வரையிலும் இந்த பங்கு உயர்ந்தது. சந்தையில் அறிமுகமான முதல் நாளிலேயே அதிரடியாக 33 சதவீதம் வரை உயர்ந்தது. BSE-ல் (மும்பை பங்குச் சந்தை) 139 லட்சம் பங்குகளும், NSE-ல் (தேசிய பங்குச் சந்தை) 9 கோடி பங்குகளும் வர்த்தகமாயின.
பந்தன் வங்கியின் ரூ.4,473 கோடி மதிப்பிலான தொடக்க பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது. கடந்த 15 முதல் 19-ஆம் தேதி வரை பங்குகள் வேண்டி 14.6 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
ஒரு பங்கு விலையாக ரூ.370 முதல் ரூ.375 ஆக நிர்ணயம் செய்யப்பட்டன. நேற்றைய வர்த்தக முடிவில் இந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ.56,920.65 கோடியாக இருக்கிறது. இது அறிமுகத்திலேயே 8 வது மிக மதிப்பு வாய்ந்த வங்கியாக திகழ்கிறது.