மாயமான ஏஎன்-32 விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை

கடந்த 3 ஆம் தேதி மாயமான ஏஎன்-32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்தனர் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 13, 2019, 02:11 PM IST
மாயமான ஏஎன்-32 விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை title=

புது டெல்லி: கடந்த 3 ஆம் தேதி மாயமான ஏஎன்-32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்தனர் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. 

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படைத் தளத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் நோக்கி சென்ற AN-32 விமானம் கடந்த 3 ஆம் தேதி மாயமானது. கடந்த 8 நாட்களாக விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதனையடுத்து அருணாசலப் பிரதேச மாநிலம் லிப்போ என்ற இடத்திற்கு அருகே 12 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் சிதைந்த பாகங்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்(Mi-17) நேற்று முன்தினம் கண்டறிந்தது.

அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான பகுதி என்பதால், விபத்து நடந்த இடத்தின் அருகே ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை. எனினும் கருடா கமாண்டோக்கள், விமானப்படை மலையேற்ற வீரர்கள் மற்றும் தரைப்படை வீரர்கள் தரையிறக்கப்படுவார்கள் என்றும், விமானத்தின் மற்ற பாகங்களையும், விமானத்தில் இருந்த 13 பேரின் நிலை குறித்தும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக 13 பேரை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், இன்று இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில், காணாமல் போன ஏஎன்-32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்து உள்ளதாக அறிவித்து உள்ளது. மேலும் விமானப்படை விபத்தில் உயிரிழந்த அனைவரையும் இந்திய விமானப்படை வீரர்கள் என்றும், அவர்களுக்கு இந்திய விமானப்படை சார்பாக அஞ்சலி செலுத்தப்படுகிறது. உயிரிழந்த இந்திய விமானப்படை வீரர்களின் குடும்பங்களுடன் எப்பொழுதும் இந்திய விமானப்படை  துணை நிற்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

 

 

Trending News