ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.
ஆதார் எண் பாதுகாப்பானது என்று தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வெளியிட்ட அறிக்கையில், “ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை. ஆதார் தகவல்கள் கசியவோ, விற்பனை செய்யப்படவோ இல்லை. ஆதார் தகவல்கள் சட்ட விதிகளை மீறி யாருக்கும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக வெளியான செய்தி தவறானது” என கூறப்பட்டுள்ளது.
ஆதார் வைத்திருப்பவரின் விழி, விரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட சில விவரங்களை அதிகாரிகளாலும் பார்க்க முடியாது. இந்தச் சூழலில், ஆதார் விவரங்களை கசியவிட்டு முறைகேடுகளில் யாரேனும் ஈடுபட முயன்றால் அவர்களைக் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, தற்போது, நாட்டில் வீடு இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்களுக்கு மத்திய அரசு எவ்வாறு ஆதார் வழங்கும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில், ஆதார் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணை நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு வந்தது. அப்போது, 90 கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டதாக கூறும் மத்திய அரசு, வீடு இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்களுக்கு எவ்வாறு ஆதார் அட்டை வழங்கும் என்று கேள்வி எழுப்பியது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 17,73,040 மக்கள் வீடில்லாமல் வசிக்கின்றனர். இதில் 52.9 சதவீதம் பேர் நகரத்திலும், 47.1 சதவீதம் பேர் கிராமப்புறங்களிலும் வசித்து வருகின்றனர் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
மேலும், ஆதார் அட்டை இல்லாமல் எப்படி சமூக நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடையும் என்றது. ஆதார் இல்லாதவர்கள் மீது அரசுக்கு அக்கரை இல்லையா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.