20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம்... பார்லி.,-ல் மசோதா தாக்கல்?

நியூஸிலாந்தில் கருக்கலைப்பை குற்றமற்றதாக்க சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Aug 6, 2019, 08:11 AM IST
20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம்... பார்லி.,-ல் மசோதா தாக்கல்? title=

நியூஸிலாந்தில் கருக்கலைப்பை குற்றமற்றதாக்க சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அதுவும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை 2 மருத்துவர்கள் பரிசோதித்து அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். 

40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த கடுமையான சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதை அறிவிக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் நிறைவேறும் பட்சத்தில் பெண்கள் கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் மருத்துவரின் உதவியோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் எந்த சட்ட வழிமுறைகளையும் பின்பற்ற தேவையில்லை. அத்துடன், கருக்கலைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோரிடம் இருந்து, கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மருத்துவமனையிலிருந்து 150 மீட்டர் சுற்றளவுள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட ஒன்றாக அறிவிக்கவும் வகை செய்கிறது.

இதுதொடர்பாக அந்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ஆன்ட்ரூ லிட்டில் தெரிவிக்கையில்., உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு அவசியமாகிறது. ஒரு பெண்ணுக்கு தனது உடலில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை உள்ளது. நியூஸிலாந்தில் தற்போது குற்றமாக கருதப்படும் ஒரே மருத்துவ நடைமுறையாக கருக்கலைப்பு மட்டுமே உள்ளது. அதை மாற்றுவதற்கான நேரம் இது என அரசாங்கம் நம்புகிறது. 

குற்றச் சட்டத்தில் இருந்து கருக்கலைப்பு நடைமுறையை நீக்க புதிய மசோதா வகைசெய்கிறது. இதனால், கருக்கலைப்பு தொடர்பான சட்டம் நவீனப்படுத்தப்பட்டு, வளர்ந்த நாடுகளின் சட்டங்களுக்கு இணையானதாக அது இருக்கும். பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது சுகாதாரம் தொடர்பான விவகாரமாக கருத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 13,000 பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். அவர்களில் 57 பேர் மட்டுமே 20 வாரங்கள் வளர்ந்த நிலையில் இருக்கும் கருவை கலைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News