இந்தியாவில் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலமாக கொரோனா பரவல் வாழ்க்கையை பாதித்தாலும், தற்போது பல இடங்களில் கொரோனா பரவல் மிகவும் குறைந்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது
அதிலும், இந்தியாவிலேயே (India) கேரளாவில், அதிக அளவில் தொற்று பரவல் உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 அரசுப்பள்ளிகளில் சுமார் 70 ஆசிரியர்கள் மற்றும் 190 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து, இந்த குறிப்பிட்ட இரு பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு, சானிடைஸ் செய்யப்பட உள்ளது. மாணவர்கள், மாஸ்குகளை சரியாக பயன்படுத்துகின்றனரா, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என பள்ளிகள் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் தெர்மல் ஸ்க்ரீனிங் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளி அதிகாரிகளிடம், மாவட்ட சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,38,194 உயர்ந்துள்ளது. புதிதாக 11,831 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 84 பேர் கொரோனா காரணமாக மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,55,080 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,34,505 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 11,904 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.20 சதவீதமாக உள்ளது.