சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கவுள்ளன. அனைத்து கட்சிகளும் பரபரப்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. இம்முறை யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதை கூட கணிக்க முடியாத வகையில், போட்டி அதிகமாகவே உள்ளது. சென்னையின் அதிகம் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்கு தொகுதி இம்முறையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபலங்கள் போட்டியிடும் இந்த தொகுதியில் எப்போதுமே மக்களின் ஆர்வம் இருக்கும். ஆயிரம் விளக்கு தொகுதியில் எந்த கட்சி இறுதியாக வெற்றி விளக்கை ஏற்றப்போகிறது என்பது மே மாதம் இரண்டாம் தேதிதான் தெரியும்.
திராவிட முன்னேற்றக் கழகம் - டாக்டர் எழிலன் நாகநாதன்
ஆயிரம் விளக்கு தொகுதியைப் பொறுத்தவரை அது திமுக-வின் (DMK) கோட்டையாக இருந்துள்ளது. 1996, 2001 மற்றும் 2006 என மூன்று ஆண்டுகள் இங்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றார். அதன் பிறகு அவர் கொளத்தூரை தனது தேர்தல் களமாக மாற்றிக்கொண்டார். தற்போது திமுக சார்பில் இங்கு 15 ஆண்டுகளாக மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதலமைச்சர் எம் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த மாநில திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் எம்.நகநாதனின் மகனாவார் எழிலன். ஒரு தீவிர பகுத்தறிவாளரான எழிலன் தொலைக்காட்சி சேனல் விவாதங்களுக்கு புகழ் பெற்றவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சில சர்ச்சைக்குரிய வாதங்களுக்காக அவர் பல முறை வலதுசாரி ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் தாக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய கருத்துகளுக்காக சமூக ஊடகங்களில் தான் பலமுறை தாக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் களத்தில் நிலைமை மாறுபட்டிருப்பதாகவும் எழிலன் கூறுகிறார். தான் ஒரு மருத்துவராக இருப்பதால், மனிதநேயம் மற்றும் இந்திய அரசியலமைப்பை நம்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இம்முறை தான் தனது தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெற்று மக்கள் தொண்டு ஆற்ற முனைப்புடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி - குஷ்பு சுந்தர்
ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னர் திமுக சார்பில் எம்.எல்.ஏ-வாக தெர்ந்தெடுக்கப்பட்ட கு.கா.செல்வம் பாஜக-வுக்கு மாறினார். இதே தொகுதியில் அவர் திமுக-வை எதிர்த்து பாஜக-வுக்காக போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த தொகுதி நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தருக்கு (Kushboo) வழங்கப்பட்டது.
ALSO READ: மேடையில் மோதல், போஸ்டரில் ஒற்றுமையா? அதிமுக, திமுக ஒரே பெண்ணின் படத்தைப் போட காரணம் என்ன?
சுமார் பத்து ஆண்டுகளாக அரசியலில் இருந்தபோதிலும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்தபோது குஷ்பூவுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை. அவர் தேர்தல் களத்தில் நேரடியாக போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். 50 வயதான குஷ்பு எம் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சேப்பாக்-திருவெள்ளிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் அப்பகுதியில் தீவிர பிரச்சார வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். எனினும், அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. குஷ்பு சுந்தர் தான் இருக்கும் கட்சிக்காக அதிரடியாக பேசி வாதங்களை வெல்லும் திறன் படைத்தவர். தற்போதும் அவர் களத்தில் மக்களை சந்தித்து பலவித பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு கட்சித் தலைமை அளித்திருக்கும் கடமையை முழுமையாக நிறைவேற்றும் முழு முனைப்புடன் அவர் தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளை தொடர்கிறார்.
நாம் தமிழர் கட்சி - ஏ.ஜெ ஷெரீன்
நாம் தமிழர் கட்சி (Naam Thamizhar Katchi) சார்பில் ஏ.ஜெ ஷெரீன் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார். கணிதத்தில் முதுகலை பட்டதாரியான இவர், தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்காக காத்திருக்கிறார். அவர் 2016 ல் அரசியலில் நுழைந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். தான் வளர்ந்த இந்த சமூகத்திற்கு ஏதாவது திருப்பிக் கொடுக்கவே தான் அரசியலுக்கு வந்ததாக அவர் கூறுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசியவாத சித்தாந்தம், மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கம் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பிரிவு மூலம் எடுக்கப்படும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஆகியவை தன்னை ஈர்த்ததாக அவர் கூறுகிறார்.
இலவசங்களும் சலுகைகளும் மக்களுக்குத் தேவை இல்லை, நிலையான வருமானத்திற்கான வழியே அவர்களுக்குத் தேவை என அவர் தெரிவிக்கிறார். தீப்பெட்டி போல் இருக்கும் தண்ணி வராத வீடுகளில் சலவை இயந்திரங்கள் அளித்து என்ன பயன் என அவர் கேள்வி எழுப்புகிறார்.
தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆயிரம் விளக்கு தொகுதியை ஒரு மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டவும் அவர் உறுதிபூண்டுள்ளார்.
ALSO READ: TN Election 2021: வரி ஏய்ப்பு செய்தார் உதயநிதி ஸ்டாலின்; தேர்தல் ஆணையத்தில் AIADMK புகார்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR