மகாராஷ்டிராவில் பாஜக-வை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தொடர்ந்த வழக்கில் விசாரணையை நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
மகாராஷ்டிராவில் அஜித் பவார் ஆதரவில் ஆட்சி அமைக்க பட்னாவிஸ் சமர்பித்த ஆதரவு கடிதம், ஆட்சியமைக்க உத்தரவிட்ட ஆளுநரின் கடிதம் ஆகியவற்றை நாளை காலை 10.30 மணிக்கு சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோருவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். தனது வாதத்தின் போது ‘இன்றைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும், பாஜக-வுக்கு பெரும்பான்மை இருந்தால் சட்டப்பேரவையில் அவர்கள் நிரூபிக்கட்டும், இல்லையெனில், நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம்’ என குறிப்பிட்டார். மேலும் யாரோ எங்கிருந்தோ கொடுத்த உத்தரவின் பேரில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி வாதிட்டார். தனது வாதத்தின் போது, ‘தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் பலம் என்பதே இல்லாமல் எப்படி துணை முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உடனே உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதனைத்தொடர்ந்து பாஜக தரப்பில் வாதிட்ட முகுல் ரோஹத்கி குறிப்பிடுகையில்., ‘யாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. பெரும்பான்மையை அவையில்தான் நீருபிக்க வேண்டும்; ஆளுநரின் முடிவு சட்ட ஆய்வுக்கு உட்பட்டதல்ல. காங்கிரஸ், சிவசேனா கோரிக்கை விடுப்பதன் படி நம்பிக்கை வாக்கெடுப்பை முன்கூட்டியே நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றால் ஆளுநரிடம் கேட்கலாம், ஆனால் அதற்காக ஞாயிறன்று நீதிமன்றத்தை தொந்தரவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையினை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தது. விசாரணையின் போது மகாராஷ்டிராவில் அஜித் பவார் ஆதரவில் ஆட்சி அமைக்க பட்னாவிஸ் சமர்பித்த ஆதரவு கடிதம், ஆட்சியமைக்க உத்தரவிட்ட ஆளுநரின் கடிதம் ஆகியவற்றை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோருவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.