தமிழகத்தில் களைகட்டுகிறது தேர்தல் களம்.
பாஜக சார்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடும் சி.கே . சரஸ்வதி, ஒரு புது வித தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார். முழங்கால் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, இலவசமாக அந்த சிகிச்சையை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
தொழில் ரீதியாக மருத்துவராக இருக்கும் இவர், தீவிரமான தேர்தல் பிரச்சாரங்களில் (Campaign) ஈடுபடும் போது முகக்கவசம் அணிய மறப்பதில்லை. அதன் அவசியத்தை இவர் மக்களுக்கு புரிய வைக்கிறார். மேலும் கொளுத்தும் வெயிலிலும் அவர் தனது பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தை மிகுந்த உற்சாகத்துடன் செய்து வருகிறார்.
ஒரு மருத்துவராக, ஆரோக்கியமான தொகுதிக்கான பரிந்துரையை அவர் அளித்துள்ளார். இளைஞர்களுக்கு தார்மீக சிந்தனைகளை வளர்ப்பது, ஆன்மீக புத்தகங்களை அறிமுகப்படுத்துவது, திறமைகளை வளர்ப்பது, குறிப்பாக கிராம மட்டத்தில் வேலைவாய்ப்பை உறுதி செய்வது, இவற்றின் மூலம் இளம் மனங்களை நல்வழிப்படுத்துவது ஆகியவை இவரது பரிந்துரைகளாக உள்ளன.
பாஜக (BJP) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நலத் திட்டங்களைத் தவிர, தன்னுடைய சொந்த செலவில், தேவையில் இருக்கும் நபர்களுக்கு முழங்கால் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்வதாக சரஸ்வதி கூறியுள்ளார்.
"தொகுதியில் பலர் முழங்கால் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழைகளாக இருப்பதால் அவர்களால் விலையுயர்ந்த சிகிச்சையை பெற முடியவில்லை என்றும் நான் கேள்விப்பட்டேன். பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலுக்குப் பிறகு, இலவச சிகிச்சை மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சைக்காக எனது மருத்துவமனைக்கு வரலாம்" என்று டாக்டர் சரஸ்வதி பி.டி. ஐ-யிடம் கூறினார்.
76 வயதான இந்த பாசமிகு மருத்துவர் போட்டியிடும் மொடக்குறிச்சி அதிமுகவின் ஒரு கோட்டையாக இருந்து வருகிறது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக இப்போது இங்கு ஏப்ரல் 6 நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளாக இந்த தொகுதியை தக்க வைத்துள்ள அதிமுக (AIADMK), இம்முறை பாஜக-வுக்காக இத்தொகுதியை விட்டு கொடுத்துள்ளது.
முன்னாள் திமுக அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு எதிராக சரஸ்வதி போட்டியிடுகிறார்.
பாஜக மற்றும் அதிமுக-வின் தேர்தல் அறிக்கைகளை குறிப்பிட்டுக் காட்டிய சரஸ்வதி, மத்திய அரசும் மாநில அரசும் கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வர பலவகையான நேர்த்தியான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என புகழ்ந்தார்.
திறமையான கிராமப்புற இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் திறம்பட போட்டியிட பயிற்சி அளிக்கபடுவார்கள் என்று சரஸ்வதி கூறியுள்ளார். கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு வளாகங்களை அமைத்துத் தருவதாகவும், ஜல்லிக்கட்டு வீர்ரகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசாங்க வேலைகளில் ஒதுக்கீட்டை உறுதி செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் கல்வியை அறிமுகப்படுத்துவது அவரது மற்ற வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
தமிழ் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்திற்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர பாடுபடுவேன் என்றும் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR