மார்கழி 25-ஆம் நாள்: திருப்பாவை 25-வது பாடலின் பொருள்!

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்........

Last Updated : Jan 9, 2019, 06:09 AM IST
மார்கழி 25-ஆம் நாள்: திருப்பாவை 25-வது பாடலின் பொருள்! title=

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்........

மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.

மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

இந்நிலையில் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.

திருப்பாவை 25-வது பாடல்:-

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:- தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். 

அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்:- பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. "உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. 

உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். 

அவன் "தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

 

Trending News