சென்னையில் ஊதியக் குறைப்பு, ஊக்கத்தொகைக் குறைப்பு ஆகியவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஸ்விக்கி உணவு வினியோகப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஸ்விக்கி நிறுவனம் இதுவரை முன்வராதது கண்டிக்கத்தக்கது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், பணி முறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, வீடுகளில் சமைப்பதற்கு பதிலாக உணவகங்களில் ஆன்லைன் முறையில் உணவுகளை வாங்கி உண்ணும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்யும் உணவுகளை உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு கொண்டுச் சென்று கொடுக்கும் பணியில் ஸ்விக்கி , சொமட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் சார்பில் வீடுகளுக்கு உணவுகளை கொண்டு சென்று வழங்கும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் 60 விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | கொரோனாவால் வியாபாரத்தில் வீழ்ச்சி; 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது Swiggy
சென்னையில் 4 கி.மீ சுற்றளவில் உள்ள இடங்களுக்கு உணவு கொண்டு சென்று வழங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊதியம் முதலில் 40 ரூபாயிலிருந்து, 35 ரூபாயாகவும், இப்போது 15 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர நீண்ட தொலைவுக்கு சென்று உணவு வழங்குவதற்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட 20 வகையான ஊக்கத்தொகைகளும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கின்றன. இது உணவு வினியோகப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருப்பதால் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
வழக்கமாக ஒரு பணியாளர் ஒரு நாளைக்கு 20 முதல் 25 இடங்களுக்குச் சென்று உணவு வழங்க முடியும். ஒரு முறை உணவு வழங்க ரூ.40 ஊதியமாக வழங்கப்பட்டால், அவர் அதிகபட்சமாக தினமும் ரூ.1,000 வருவாய் ஈட்டுவார். அதில் உணவு மற்றும் எரிபொருள் செலவு போக ஒரு நாளைக்கு ரூ.750 வரை கிடைக்கும். அது அவர்களின் குடும்பச் செலவுக்கு போதுமானதாக இருக்கும். அத்துடன் கூடுதலாக கிடைக்கும் ஊக்கத்தொகை அவர்களின் பிற தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.
ஆனால், இப்போது ஒருமுறை உணவு வழங்க ரூ.15 மட்டுமே வழங்கப்படுவதாலும், தினமும் 20 முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு ரூ.300 மட்டும் தான் வருமானமாக கிடைக்கிறது. அதிலும் உணவு மற்றும் எரிபொருள் செலவு ரூ.200 போக ரூ.100 கூட நிகர வருமானமாக கிடைப்பதில்லை. இதனால் சென்னை மக்களுக்கு உணவு வினியோகிக்கும் ஸ்விக்கி பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உணவு கிடைப்பதில்லை. ஊதியக் குறைப்பைக் கண்டித்து ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஸ்விக்கி நிறுவனம் முன்வரவில்லை. அதேபோல், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் இந்த சிக்கலில் தலையிட்டு, இரு தரப்பையும் அழைத்துப் பேசி தீர்வு காண வில்லை. இது கடமை தவறிய செயலாகும்.
ஸ்விக்கி நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைத்தது எந்த வகையிலும் நியாயமில்லை. ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களின் மூலம் உணவு ஆர்டர் செய்யும் போது, உண்மையான விற்பனை விலையை விட 20 முதல் 30% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உணவு வழங்குவதற்கான வினியோகக் கட்டணமாக ரூ.50 முதல் ரூ.125 வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கொள்ளை லாபம் பார்க்கும் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு ரூ.40 ஊதியம் வழங்க மறுப்பது நியாயமல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைப்பது பெரும் பாவம்.
ALSO READ | ICICI வங்கியுடன் கைகோர்க்கும் Swiggy; கூட்டணியின் காரணம் என்ன?
எனவே, ஸ்விக்கி நிறுவனம் உடனடியாக அதன் உணவு வினியோகப் பணியாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்குத் தேவையான ஏற்பாடுகளை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும். ஸ்விக்கி ஊழியர்கள் குடும்பப்பசியை போக்க வேண்டும்.