சீன அரசு தனது ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது. கடந்த 3 வருடங்களில் இல்லாத அளவுக்கு இராணுவ பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை சீன அரசு உயர்த்தியுள்ளது. சென்ற ஆண்டு சீனாவின் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 7 சதவீதத்தை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கிய சீனா, 2018-ம் ஆண்டிற்கு 8.1 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது.
இந்திய மதிப்பில் இது சுமார் 11.4 லட்சம் கோடி ரூபாய் அளவாகும். இந்திய பட்ஜெட்டை விட இது 3 மடங்கு அதிகமாகும். சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 6.5 சதவீதமாக உயரும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
சீன பிரதமர் லீ கெக்கியாங் இதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். உலகிலேயே அதிக காலாட்படை ராணுவ வீரர்களை கொண்ட நாடு சீனாவாகும். அமெரிக்காவிற்கு பிறகு, ராணுவத்திற்கு அதிகம் செலவழிக்கும் நாடு சீனவாகும். பொருளாதாரத்தில் கவனத்தை செலுத்தி, ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாக அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார்.
ராணுவத்தை நவீனமயமாக்குவதில் தங்களது கவனம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர். சொன்னது போலவே, 3 லட்சம் வீரர்களை குறைத்துள்ளதாக பிரதமர் லீ இன்று கூறினார்.