முன்னாள் பிரதமர் விடுதலை! இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்! பாக் உச்ச நீதிமன்றம்

Pakistan Crisis: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது "சட்டவிரோதமானது" என்று கண்டித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2023, 06:26 AM IST
  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது "சட்டவிரோதமானது"
  • பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்
முன்னாள் பிரதமர் விடுதலை! இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்! பாக் உச்ச நீதிமன்றம் title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது "சட்டவிரோதமானது" என்று அரசைக் கண்டித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது "சட்டவிரோதமானது" என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்ததுடன், இம்ரான் கானை, உச்ச நீதிமன்ற அமர்வின் முன் ஆஜர்படுத்திய பின்னர் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வெளியிட்டது.

70 வயதான இம்ரான் கானை ஆஜர்படுத்துவதற்கான உத்தரவை பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு பிறப்பித்தது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காவலில் வைக்கப்பட்ட விதம் குறித்தும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது கோபத்தை வெளிப்படுத்தியது.

மாலை 4:30 மணிக்குள் (பாகிஸ்தான் உள்ளூர் நேரம்) கானை ஆஜர்படுத்துமாறு தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்திற்கு (National Accountability Bureau  (NAB)) நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

முன்னதாக, விசாரணையின் தொடக்கத்தில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஒரு தனிநபரை எவ்வாறு கைது செய்ய முடியும் என்று தலைமை நீதிபதி பண்டியல் கேட்டார். கான் உண்மையில் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததை நீதிபதி மினல்லா கவனித்தார். "ஒருவருக்கு நீதிக்கான உரிமையை எப்படி மறுக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | பற்றி எரியும் பாகிஸ்தான்... பொது சொத்துக்களுக்கு தீ வைப்பு... இணைய சேவை முடக்கம்!

நீதிமன்ற பதிவாளரின் அனுமதியின்றி எவரையும் நீதிமன்றில் இருந்து கைது செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. கைது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையை மறுப்பது, அச்சத்தை ஏற்படுத்துவது மற்றும் நீதியை அணுகுவதை மறுப்பதற்கு சமம் என்றும் நீதிமன்ற அமர்வு அவதானித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவது என்பது நீதிமன்றத்தில் சரணடைவதற்குக் என்னும்போது, சரணடைந்த பிறகு ஒருவரை எவ்வாறு கைது செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். "ஒரு நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தால், அவரை எப்படி கைது செய்ய முடியும்? அப்படி கைது செய்வதன் அர்த்தம் என்ன?" என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
முன் ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை (IHC) இம்ரான் அணுகியதாகவும் ஆனால் துணை ராணுவ ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டதாகவும் இம்ரான் கானின் வக்கீல் ஹமீத் கான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். "ரேஞ்சர்கள் இம்ரான் கானிடம் தவறாக நடந்து கொண்டு அவரை கைது செய்தனர்" என்று வழக்கறிஞர் கவலை தெரிவித்தார்.

மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!

கானை கைது செய்ய 90 முதல் 100 ரேஞ்சர்ஸ் பணியாளர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைந்ததையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. "90 பேர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தால், நீதிமன்றத்திற்கு என்ன கௌரவம் மிஞ்சும்?" என்று கேள்வி கேட்ட நீதிபதிகள்,. "எந்தவொரு நபரையும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து எப்படி கைது செய்ய முடியும்?" என்றும் கேள்வி எழுப்பினார்கள். 

பாகிஸ்தான் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் 'நீதிமன்ற அவமதிப்பு' செய்துள்ளதாக தலைமை நீதிபதி பண்டியல் குறிப்பிட்டார். கைது செய்வதற்கு முன், நீதிமன்ற பதிவாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். நீதிமன்ற ஊழியர்களும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டனர்'' என்று நீதிபதிகள் கண்டித்தார்கள்.

இம்ரான் கான் செவ்வாயன்று (2023, மே 9) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை அல்-காதிர் அறக்கட்டளை வழக்கு தொடர்பாக எட்டு நாட்களுக்கு தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்திடம் ஒப்படைத்தது, பாகிஸ்தான் பொறுப்புக்கூறல் நீதிமன்றம்.

அதனையடுத்து, புதனன்று உச்ச நீதிமன்றத்தை அணுகிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மே 1-ம் தேதி NAB-ன் கைதுக்கான வாரண்டுகளை ஒதுக்கி வைக்கவும், தற்போது தான் கைது செய்யப்பட்டதை 'சட்டவிரோதம்' என்றும் முறையீடு செய்தார்.

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் முடிவை, இம்ரான் கானின் கைது சவால் செய்வதாகவும், இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விதத்தில் கோபத்தை வெளிப்படுத்திய IHC, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.  

மேலும் படிக்க | அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News