சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசின் தாக்கத்தினாலும், பாதிப்பினாலும் அச்சமடைந்திருக்கும் நிலையில், மருத்துவ முகக்கவசங்களை அணிந்த வட கொரியர்கள் தலைநகர் பியோங்யாங்கில் (Pyongyang) கூடியுள்ளனர். இந்த செய்தியை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
நாளை, சனிக்கிழமையன்று ஒரு பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணிவகுப்பில், நாட்டின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணைள் இடம்பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.
வடகொரியா உருவான அக்டோபர் 10ஆம் தேதி ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாட்டங்கல் நடைபெறும். கலை மற்றும் கண்காட்சிகள், ஒளி நிகழ்ச்சி, நினைவுச்சின்னங்களை சென்று கண்டு களித்தல் என மக்கள் வடகொரியா நிறுவக நாளை கொண்டாடுவார்கள். 75 வது ஆண்டு நிறைவு நாள் நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், நாளை நடைபெறும் ராணுவ அணிவகுப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் கொண்டாடப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
வட கொரியா இந்த அணிவகுப்பைப் பயன்படுத்தி புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (intercontinental ballistic missile (ICBM)) காட்சிப்படுத்தும் என்று தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
"தனது பொருளாதார சாதனைகள் மந்தமாக இருக்கும் நேரத்தில் மக்களின் கவனத்தை திசைத் திருப்ப, புதிய ICBM அல்லது நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள் போன்ற புதிய மூலோபாய ஆயுதங்களை வெளியிடும் வாய்ப்பு உள்ளது" என்று தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் கூறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக வடகொரியா புதிய ஆயுதங்களை காட்சிப்படுத்துவது, "குறைந்த தீவிரத்தன்மை கொண்ட ஒரு ஆர்ப்பாட்டம்" என்று தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சர் லீ இன்-யங் (Lee In-young) தென்கொரிய எம்.பிக்களிடம் தெரிவித்தார். இதுவும் ஒருவிதமான எரிச்சலூட்டும் நடவடிக்கை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
2018இல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை முதன்முதலில் சந்தித்த பிறகு, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) அணிவகுப்பில் ஐசிபிஎம்களைக் (ICBM) காட்டவில்லை, ஆனால் வாஷிங்டனுடன் அதிகரித்துவரும் கருத்து வேறுபாடுகளை காட்ட இந்த சந்தர்பத்தை வட கொரியத் தலைவர் பயன்படுத்தலாம்.
"புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் வட கொரியா தனது நோக்கத்தை வெளிப்படுத்தலாம். அதுமட்டுமல்ல, வட கொரியா தொலைதூர ஏவுகணை சோதனைகளை மீண்டும் தொடங்கும் என்பதைக் குறிக்கும் ராஜதந்திர நடவடிக்கையாகவும் இது இருக்கலாம்" என்று ஜேம்ஸ் மார்ட்டின் மையத்தின் (James Martin Center) ஏவுகணை ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி லூயிஸ் (Jeffrey Lewis) கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ள ஏராளமான பிரதிநிதிகள் மற்றும் பிற பார்வையாளர்கள் முகக்கவசங்கள் அணிந்திருக்கும் புகைப்படங்களை வடகொரிய ஊடகங்கள் காண்பித்தன.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதான தகவல் எதையும் இதுவரை வட கொரியா அறிவிக்கவில்லை. ஆனால் அரசாங்கம் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளையும், தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது அந்நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR