மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த 11 ஆண்டுகளாக போராடி வரும் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு இரண்டு வழக்குகளில் பதினோரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 12, 2020, 07:39 PM IST
  • பயங்கரவாத நிதி வழக்கில் மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது
  • இந்த வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் புதன்கிழமை ஹபீஸுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
  • 2008 மும்பை தாக்குதலில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர்.
  • FATF-யின் எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் அரசு ஹபீஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது title=

லாகூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் மும்பை தாக்குதலின் சூத்திரதாரியாக இருந்த ஹபீஸ் சயீத்துக்கு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இரண்டு வழக்குகளில் பதினோரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதாவது ஒரு வழக்கில் ஐந்தரை ஆண்டுகள் என இரண்டு வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சர்வதேச தீவிரவாத தடுப்பு அமைப்பின் எச்சரிக்கையை அடுத்து ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் பஞ்சாப் காவல்துறை தீவிரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. இந்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி அளித்ததாக, அவருக்கு இரண்டு வழக்குகளிலும் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ .15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஹபீஸுக்கு எதிராக மொத்தம் 29 வழக்குகள் என பயங்கரவாத நிதி, பணமோசடி மற்றும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருத்தல் ஆகியவையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தன.

எப்ஏடிஎப் (Financial Action Task Force) தடுப்புப்பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என்ற அச்சுறுத்தலை அடுத்து ஹபீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், ஹபீஸை சட்டத்தின் பிடியில் கொண்டுவர கடந்த 11 ஆண்டுகளாக போராடி வரும் இந்தியாவுக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும். 

பயங்கரவாதத்தின் தந்தையாக உலகப் புகழ்பெற்ற பாகிஸ்தான், FATF தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டால், அதன் பொருளாதாரம் மூழ்கும் நிலை ஏற்படும் என்றும், அதை மீட்டெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அச்சம் பாகிஸ்தானுக்கு இருந்தது.

இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்தது:
பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களை அவ்வப்போது இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்பியுள்ளது. ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் மீதான வழக்கை விரைவுபடுத்துமாறு சமீபத்தில் அமெரிக்காவிடம் இந்தியா முறையிட்டதை அடுத்து முழுமையான ஆதரவும் கிடைத்துள்ளது. டிசம்பரில், ஹபீஸ் மற்றும் அவரது மூன்று நெருங்கிய கூட்டாளிகளான ஹபீஸ் அப்துல் சலாம் பின் முஹம்மது, முகமது அஷ்ரப் மற்றும் ஜாபர் இக்பால் ஆகியோருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதை அமெரிக்கா வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை பயமுறுத்தும் FATF:
பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் நிதியை கண்காணிக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தான் பிப்ரவரி மாதத்திற்குள் பயங்கரவாதத்திற்கு அளிக்கும் நிதியுதவி கட்டுப்படுத்தப்படாவிட்டால், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் என்று எச்சரித்தது. அப்போதிருந்து, பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசாங்கம் ஹபீஸை இறுக்கத் தொடங்கியது. 

சமீபகாலமாக பயங்கரவாத குழுக்கள் மீது பாக்கிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து FATF நிம்மதி தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியே வர வாய்ப்பு உள்ளது.

மும்பை தாக்குதல்:
2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, இந்தியாவின் பொருளாதார நகரான மும்பையில் 10 லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையின் சிஎஸ்டி ரயில் நிலையம், மும்பையின் கம்பீரமான தாஜ்பேலஸ் மற்றும் ட்ரைடென்ட் ஹோட்டல் உட்பட பல பகுதிகள் அன்றைய தினம் குறிவைக்கப்பட்டன. இறந்தவர்களில் வெளிநாட்டு குடிமக்களும் அடங்குவர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹபீஸ் பயங்கரவாத பட்டியலில் வைக்கப்பட்டு, அவருக்கு வெகுமதியை அமெரிக்கா அறிவித்தது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News