வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வெளிப்படையான பேச்சுக்காகவும் தனது குணாதிசயத்துக்ககாவும் புகழ் பெற்றவர். இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை அவரே அதை மாற்றி கூறுவதும் பல முறை நடந்துள்ளது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கூட அவர் இதற்கு பெயர் போனவர்.
தற்போது அவர் இதை நன்கு உணர்ந்துவிட்டதாக அவரே கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெள்ளிக்கிழமை (ஜூலை 24) அளித்த ஒரு பேட்டியில் தனது ட்வீட்கள் குறித்து தான் அடிக்கடி வருத்தப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டார்.
பார்ஸ்டூல் ஸ்போர்ட்ஸுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், “முன்பெல்லாம் மக்கள் கடிதங்கள் மூலம்தான் தொடர்பில் இருந்தனர். கடிதத்தை எழுதிவிட்டு அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என ஒரு நாள் முழுதும் யோசித்து பின்னர் அதை அனுப்புவோம். ஆகையால் நாம் எதையாவது தவறாக எழுதிவிட்டால், அதை மாற்ற நமக்கு அவகாசம் கிடைத்தது. ஆனால் ட்விட்டரில் நாம் அப்படி செய்வதில்லை” என்றார் டிரம்ப்.
“மிகவும் நன்றாக இருக்கிறது என எண்ணி சிலவற்றை நாம் ட்வீட் செய்து விடுகிறோம். ஆனால் அதன் பிறகு பலர் தொலைபேசியில் அழைத்து, ‘நீங்கள் உண்மையாக அப்படி கூறினீர்களா?’ எனக் கேட்கிறார்கள்” என்று கூறினார்.
"ரீ-ட்வீட்கள் தான் நம்மை அடிக்கடி சிக்கலில் சிக்க வைக்கிறது" என்றும் டிரம்ப் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம், ஆனால் அதைப் பற்றி விசாரிப்பதில்லை. அப்படியே நம்பி விடுகிறோம்” என்று தெரிவித்தார்.
சமீபத்திய மாதங்களில் டிரம்பின் பல ட்வீட்டுகள் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. வெள்ளை சக்தி என பொருள் கொள்ளும் ‘white Power’ சார்ந்த ட்வீட்களை போஸ்ட் செய்ததால் டிரம்ப் வெகுவாக விமர்சிக்கப்பட்டார். மேலும் அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசியைக் (Dr. Anthony Fauci) குறிப்பிடும் #FireFauci ட்வீட்களை ரீ-ட்வீட் செய்தும் டிரம்ப் விமர்சனங்களில் மாட்டிக்கொண்டார்.
ALSO READ: Covid-19 பரிசோதனையில் முன்னணியில் அமெரிக்காவும் இந்தியாவும் - அதிபர் Trump!!
நவம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் இப்படிப்பட்ட விமர்சனங்களும், தனது ட்வீட்களைப் பற்றிய விஷயங்களை டிரம்பே ஒப்புக்கொண்டுள்ளதும் அவரது கட்சிக்காரர்களிடையே வியப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா, ஒரு பக்கம் தேர்தல்கள் என இரு பக்கமும் நெருக்கடிகள் இருக்கையில் இப்படிப்பட்ட தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து டிரம்ப் விலகி இருக்க வேண்டும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
ALSO READ: COVID-19 தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் பணியாற்ற தயார்: Donald Trump