கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசை வரும் மே 9-ம் தேதி (இன்று) வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த இசைவெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது. சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.
இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துகொள்கின்றனர். அத்துடன், ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரும் திரையுகலகத்தை சேர்ந்த விஐபிக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு, ஸ்பெஷலாக டிஜிட்டல் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் இருக்கும் இந்த அழைப்பிதழ் கார்டை அங்குள்ள ஸ்வைப்பிங் மெஷினில் தேய்த்தால் தான் அவர்கள் அரங்கத்திற்குள் நுழைய முடியும்!
இந்த விழாவில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து திறண்டு வரும் ரசிகர்களுக்கு தனியாக அழைப்பிதழும், நுழைவு அட்டையும் வழங்கப்பட்டிருக்கிறது. விழா முடிந்ததும் ரசிகர்களுக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் விருந்தும் காத்திருக்கிறது.