டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்க ஏன் தாமதம் செய்யப்படுகிறது. தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் நடக்கிறதா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் ஓராண்டுக்கு மேலாகியும் வெளியிடப்படவில்லை. மிக முக்கியமான போட்டித் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசுத் துறைகளில் 29 மாவட்ட துணை ஆட்சியர்கள், 34 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள், ஒரு மாவட்டப் பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், 8 மாவட்ட தீயவிப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரி என மொத்தம் 85 முதல் தொகுதி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளில் மொத்தம் 4602 பேர் பங்கேற்றனர். வழக்கமாக இத்தேர்வு முடிவுகள் அதிகபட்சமாக 4 மாதங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டுக்குப் பிறகும் முடிவுகள் வெளியாகவில்லை என செய்திகள் வந்துள்ளன.
தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாதது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்வில் பங்கேற்ற அனைவரின் விடைத்தாள்களும் திருத்தப்பட்டுவிட்ட நிலையில், சிலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை தேர்வாணைய அதிகாரிகள் என்ற பெயரில் சிலர் தொடர்பு கொண்டு லட்சங்களில் பணம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பேரம் பேசியதாகவும் தெரிகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015-ஆம் ஆண்டு நடத்திய முதல் தொகுதி தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததையும், அத்தேர்வில் விடைத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டதையும் கடந்த ஆண்டு நான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். அதன் தொடர்ச்சியாக அந்த முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த விசாரணையில் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முறைகேடு செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டால் அதுவும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதால் தான் முடிவுகளை வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னரே முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.
சர்ச்சைக்குரிய முதல் தொகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்டது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 1.38 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் 4602 பேர் முதன்மைத் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் அதற்கான முடிவுகள் வெளியிடப் படவில்லை என்றால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீதான நம்பிக்கை தகர்ந்து விடும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல்பணி உள்ளிட்ட 23 வகையான குடிமைப் பணிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்வதற்கான அத்தேர்வுகளின் ஒவ்வொரு கட்டமும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணைப்படி நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இந்தியா முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அதனால் கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில் பங்கேற்றவர்கள் முடிவுகளைப் பொறுத்து அடுத்தக்கட்ட முடிவை எளிதாக தீர்மானிக்க முடிகிறது. இதேபோன்ற சிறந்த அணுகுமுறையையும், ஒழுங்கையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடைபிடிக்காதது ஏன்? அதற்கு தடையாக இருப்பது எது?
முதல் தொகுதி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான நேர்காணல்களை மின்னல் வேகத்தில் நடத்தி, அதைவிட அதிக வேகத்தில் முடிவுகளை அறிவித்து பணி நியமன ஆணைகளை வழங்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மட்டும் தாமதம் செய்வது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. முதன்மைத் தேர்வுகளில் முறைகேடு நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை இந்த தாமதம் உறுதி செய்கிறது. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மீது இத்தகைய சந்தேக நிழல் படிவது நல்லதல்ல.
இந்த நிலையை மாற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை கொண்டவையாக மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் போட்டித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் போதே, அத்தேர்வுகளின் பல கட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடிவு வெளியிடப் படும் தேதியும் அறிவிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் முன்பாக 2016 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதி முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை ஒரு வாரத்திற்குள் ஆணையம் வெளியிட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.