நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்துக்கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அப்பணிகளில் முன்னணியில் இருக்கிறது. ஒருபுறம் தேர்தல் களப்பணிகளுக்கான முன்னேற்பாடுகள், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வாக்குறுதி அறிக்கை பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்நிலையில் பிரதான கட்சிகள் தரப்பில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற உத்தேசப்பட்டியல் அரசியல் வட்டாரங்களில் உலவி வருகின்றது. அது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம். அந்த வகையில், அகர வரிசைப்படி முதலாவதாக அரக்கோணம் தொகுதியில் திமுகவின் வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரக்கோணம் தொகுதி வேட்பாளர்
அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் A.V.சாரதி நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த A.V.சாரதி சிமெண்ட் மொத்த வியாபாரம், குவாரி பணிகள் ஆகியவற்றை செய்து வருகிறார். தற்போது திமுகவின் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வரும் இவர், தான் சார்ந்த பகுதியில் கட்சிப்பணிகள் மற்றும் மக்கள் பணிகள் மூலமாக பரீட்சயமானவராக அறியப்படுகிறார். மேலும், அப்பகுதி மக்களுக்காவும், அவர் சார்ந்த சமூக மக்களுக்காவும் மேற்கொண்ட பணிகளால் கவனிக்கப்படுகிறார். அதிமுகவில் மாவட்ட வர்த்தகப்பிரிவு செயலாளராக இருந்த இவர், அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் இணைந்து கட்சிக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
உள்ளூர் மக்களிடையே இருக்கும் செல்வாக்கு மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட திமுகவில் ஆற்றிய காட்சிப்பணிகள் மூலமாக அறியப்பட்டிருந்தார் A.V.சாரதி. அந்நிலையில், திமுகவினர் மீதான ஒன்றிய அரசின் ஐ.டி தாக்குதலுக்கு உள்ளானவர்களுள் இவரும் ஒருவர். அதற்கு காரணம் இவர் சார்ந்த பகுதியிலும் சரி, பொதுவாகவும் சரி திமுகவின் வளர்ச்சிக்கு காரணமானவர்களுள் ஒருவராக இருக்கிறார் என்பதே. சமீபத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டு பணிகளில் இவரது பணிகள் திமுக தலைமையாலும், இளைஞரணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினாலும் கவனிக்கப்பட்டதும் இந்த உத்தேசப்பட்டியலில் இடம்பெற்றதற்கான காரணம் எனவும் கணிக்கப்படுகிறது.
அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஜெகத்ரட்சகன் ஏற்கனவே 2 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றவர். இருப்பினும், சமீபத்திய ரெய்டுகளால் மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை சம்பாதித்துள்ள நிலையில், அண்ணாமலையும் தன் பங்கிற்கு 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் போது, "ஜெகத்ரட்சன் ஊழல் தலைவர்; 1250 கோடி ரூபாய் வழக்கில் சிக்கி உள்ளார்" என அம்பலப்படுத்தியது, தொகுதியில் மக்களின் குறைகளை தீர்க்காததை எடுத்துரைத்தது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக, அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்தியுடன் சுமூக உறவு இல்லாததாலும் வேலூர் தொகுதியில் நிற்க முடிவெடுத்து வருவதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதிய வாக்கு வங்கி
அதுபோக, அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் வன்னியருக்கு இந்த தொகுதியை ஒதுக்குவதன் மூலம் வெற்றியை எளிதாக்கி விடலாம் என்று திமுக தலைமை நினைக்கிறது. மேற்கூறிய முக்கிய புள்ளிகள் இத்தொகுதியில் சமூக பின்புலம் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் 'பாமக நேரடியாக போட்டியிடும் தொகுதி' என்ற காரணத்தினாலும், 'வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் அல்லாதவரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு' எனவும் திமுக தலைமை நினைக்கிறது.
ஆகவே தான், ராணிப்பேட்டை மாவட்டத்தின் பொருளாளராக இருக்கும் வன்னியர் வகுப்பை சேர்ந்த ஆற்காடு A.V.சாரதி இத்தொகுதியில் போட்டியிட்டால் சரியாக இருக்குமென திமுக ஆலோசனையில் உள்ளது. காரணம், இதற்கு முன் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் சாரதி அவர்கள் சாதுரியமான பல நகர்வுகளால் கட்சிக்கு வெற்றிகளை தேடித் தந்தவர் என்பதாலும், அங்கு வசிக்கும் மக்களுடன் நெருங்கி பழகுபவர் என்பதாலும், பல்வேறு தொண்டுகள், உதவிகள் செய்து வருபவர் என்பதாலும், தொழில் மற்றும் தேர்தலுக்கான பணி செய்யும் நல்ல கட்டமைப்பை உடையவர் என்பதாலும் சீட்டு வழங்கும் பட்டியலில் இவர் பெயர் முதல் இடத்தில் உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | அதிமுக பாஜக கூட்டணி முறிவு: எடப்பாடி பழனிசாமி தான் உண்மையை சொல்லணும் - அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ