Tamil Nadu women Pink auto subsidy scheme | இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கிறது. டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையில், இந்த திட்டத்தின் தகுதிகள், விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், " சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக 'இளஞ்சிவப்பு ஆட்டோக்களை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னை மாநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு, பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு. பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது. புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும்.
இது தொடர்பாக, சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்க சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்கள் (வடக்கு மற்றும் தெற்கு), 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600001 என்ற முகவரிக்கு 23.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பபட்டிருந்தது. தற்போது, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அளவு 10.12.2024 வரையில் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் தகுதி பெற 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அந்த தகுதி நீக்கப்பட்டு. கீழ்க்கண்ட தேவையான தகுதிகள் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளது.
இளஞ்சிவப்பு ஆட்டோ ஓட்டுநர் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
1. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
2. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
5. சென்னையில் குடியிருக்க வேண்டும்
இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும். எனவே, சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 10.12.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க | தமிழக அரசு வழங்கும் ரூ. 3000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ