Mudhalvar Marundhagam: வரும் ஜனவரியில் தமிழ்நாடு முழுவதும் மாநில அரசு சார்பில் 'முதல்வர் மருந்தகம்' திறக்கப்பட இருக்கும் நிலையில், மருந்தகம் அமைக்க விரும்புவோர் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி, யார் யார் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி மலிவு விலை மருந்துகள் திட்டம் செயல்படுவதை போன்று தமிழ்நாடு அரசு சார்பிலும் இந்த 'முதல்வர் மருந்தகம்' திட்டம் (Mudhalvar Marundhagam) தொடங்கப்படுகிறது. கடந்த சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் 1000 மருந்தகங்கள் முதற்கட்டமாக தொடங்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதற்கு தீர்வளிக்கும் விதமாக 'முதல்வர் மருந்தகம்' என்ற பெயரில் 1000 மருந்தகங்களை மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் (Tamil Nadu Chied Minister MK Stalin) தனது சுதந்திர தின விழா உரையில் குறிப்பிட்டிருந்தார்.
தேவையான ஜெனரிக் மருந்துகளை தமிழ்நடு மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து முதல்வர் மருந்தகங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
மேலும், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், டாம்கால், இம்காப்ஸ் உள்ளிட்ட பிற மருந்துகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை அன்று இந்த 1000 மருந்தகங்கள் தொடங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) தெரிவித்திருந்தது. எனவே, இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசின் www.mudhalvarmarundhagam.tn.gov.in இந்த அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அந்த வகையில், முதல்வர் மருந்தகங்கள் அமைக்க B.Pharm/D.Pharm சான்றிதழை சமர்பிக்க வேண்டும். B.Pharm/D.Pharm சான்றிதழ் பெற்றவர்களின் ஒப்புதலுடன் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வரும் டிச.5ஆம் தேதிதான் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
சிறப்பாக செயல்படும் மருந்து விற்பனையாளர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு 3 லட்சம் ரூபாய் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.