அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை

நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து இன்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 10:10 PM IST
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை title=

தமிழகத்தின் அரசுப் பயணியாளர்கள் சில முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து இன்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) அவர்களை சந்தித்தனர். 

முதல்வரை சந்தித்த ஒருங்கிணைப்பாளர்கள் 14 அம்ச கோரிக்கைளை மனுவாக அளித்தனர்.

1.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

2. இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காகக் கடந்த செப்டம்பர் 2017, ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நடவடிக்கையாக பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களை மீண்டும் அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய பணியிடத்திலேயே பணியமர்த்திட வேண்டும்.

3. கடந்த ஜாக்டோ- ஜியோ போராட்டக் காலத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகள் இதுநாள் வரை ரத்து செய்யப்படாததால், விருப்ப ஓய்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கு மிகப் பெரும் தடையாக உள்ளது. காவல்துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

4. கொரோனா (Coronavirus) நோய்த் தொற்றுக் காலத்தில் கடந்த அதிமுக அரசு மூன்று தவணை அகவிலைப் படியினை முடக்கியது. தற்போது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு ஜூலை 2021 முதல் 11 விழுக்காடு அகவிலைப் படியினை அறிவித்துள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப் படியினை தமிழக அரசு உடனடியாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

சமீஹா பர்வீன் 'தங்க மகளாக' திரும்பி வரவேண்டும் - அமைச்சர் வாழ்த்து

5. கொரோனா நோய்த் தொற்றினைக் காரணம் காட்டி, சரண் விடுப்பினையும் கடந்த ஆட்சியாளர்கள் ரத்து செய்துள்ளனர். சரண் விடுப்புச் சலுகையினையும் உடனடியாக வழங்க வேண்டும்.

6. இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

7. முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும்.

கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.

8. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

9. 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

10. 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

11. அரசாணை எண் 56-ல் இளைஞர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கின்ற வகையில் பகுப்பாய்வு குழு அமைக்கப்பட்டு, அக்குழு அரசிடம் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மேலும் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் 100 மற்றும் 101ஐ ரத்து செய்திட வேண்டும். 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியினைப் பாதுகாத்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12. 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

13. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி / யுகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.

14. பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி, கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு - கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையில் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராகப் பணியமர்த்த வேண்டும்''

என ஜாக்டோ ஜியோ அளித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: Tollgate: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News