சென்னை: டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்த பிறகு, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பிறகு, கடந்த, 12-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை, ‛வர்தா' புயல் தாக்கியது. புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள
முதல்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் வழங்கும்படி பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். இந்நிலையில், இன்று விமானம் மூலம் டெல்லி வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசி அவரிடம் 184 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை வழங்கினார் அந்த மனுவில் தமிழகத்தில் ‛வர்தா' புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு 22,500 கோடி ரூபாயை நிவாரணமாக அளிக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-க்கும் அவரது மரணத்திற்கு பிறகு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல் - அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்வது இதுவே முதல் தடவை ஆகும். பயணத்தை முடித்துக் கொண்டு ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவே சென்னை திரும்புகிறார் என தெரிகிறது.