தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 'ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அறிக்கையின் அடிப்படையில், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
ALSO READ : TN Assembly: NEET மசோதா நீட்டாக ஒருமனதாக நிறைவேறியது
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபென் தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த அறிக்கையின் நகலை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
பின்னர், கடந்த 2018ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கூடாது எனவும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.
தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
ALSO READ : Neet bill: நீட் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது; மசோதா சட்டமாகுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR