ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கடந்த ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, பொதுமக்கள் படுகொலை, பொதுச்சொத்துக்களுக்குத் தீவைப்பு போன்ற வன்முறை வெறியாட்டங்களின் மூலம் அரங்கேற்றப்பட்ட அரசக்கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. வேதாந்தா குழுமம் என்னும் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய அந்த வன்முறையால்15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சுற்றுச்சூழல் நஞ்சாவதைத் தடுக்க வேண்டும் என்றும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிலையாக மூடவேண்டும் என்றும் பொதுமக்கள் போராடியதற்காகவே இத்தகைய அரசக்கொடூரம் ஈவிரக்கமின்றி நிறைவேற்றப்பட்டது. அந்தக் கொடிய அரசபயங்கரவாதத்திற்கு பலியான அப்பாவி மக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பலியானவர்களின் குடுமபத்தைச் சார்ந்தவர்கள் தூத்துக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்பது வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது. தமிழகஅரசு, குறிப்பாக காவல்துறையின் இத்தகைய கெடுபிடியான அடாவடிப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவன்மையாகக் கண்டிக்கிறது.
ஓராண்டு கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியதாகும். அத்துடன், வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கினையே தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. அதற்கான சான்றாகவே தூத்துக்குடியில் இன்று காவல்துறையினர் நடந்துகொள்ளும் அடக்குமுறை போக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
தூத்துக்குடியில் மட்டுமின்றி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மோடிஅரசு உரிமம் வழங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கேவலப்படுத்துவதாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்தின் வாழ்வாதாரங்களை நாசமாக்கும் வகையில் பல்வேறு வேதிநச்சுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் மட்டுமின்றி, மேலும் பல வேதிநச்சு திட்டங்களின் மூலம் தமிழகத்தையே நாசமாக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதை அறியமுடிகிறது. இத்தகைய நாசாக்கார நச்சுத்திட்டங்களிலிருந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தால் பலியான தோழர்களின் நினைவினை நெஞ்சில் ஏந்தி, அகில இந்திய அளவில் சாதிய-மதவாத சக்திகளிடமிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கார்ப்பரேட் மற்றும் ஆளும் வர்க்கம் ஆகிய கூட்டுக் கொள்ளை கும்பலின் நாசக்காரத் திட்டங்களிலிருந்து தமிழகத்தைக் காக்கவும் ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து போராட இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.