தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில் நிலவம் தண்ணீர் பஞ்சத்திற்கு ஆளும் அதிமுக-வின் நிர்வாக திறைமையின்மையே காரணம் என திமுக உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை பேக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டங்கள் தோறும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ மழை சரியாக பெய்யாததாலேயே கடுமையான வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னரே இது குறித்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்ற தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில்., தமிழகம் வழக்கமாகப் பெறும் மழையளவில் 69 சதவீதத்திற்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டது என்பது தெரிந்த பிறகும், அ.தி.மு.க அரசின் அலட்சியத்தாலும் நிர்வாகப் படு தோல்வியாலும் இன்றைக்கு சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
குடிநீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை ஆழப்படுத்தி, நீர்தேக்கக் கொள்ளளவை உயர்த்தப் போகிறோம்” என்று நிதி நிலை அறிக்கையிலும், மான்யக் கோரிக்கைகளிலும் அ.தி.மு.க அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், ஒதுக்கப்பட்ட நிதிகளும் பதுக்கப்பட்ட நிதிகளாகி அதோ கதியாகி விட்டன.
தமிழகத்தின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்கு சிந்தனைக்கு அ.தி.மு.க அரசில் மிகப்பெரும் “பற்றாக்குறை”யும் வறட்சியும் ஏற்பட்டு விட்டது. எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தலையாய காரணம் என குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.