கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!
தமிழகத்தில் 'கஜா' புயல் தாக்கத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களி கஜா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 20 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, பாதிப்பு குறித்து, களத்திற்கு நேரடியாக செல்லாமல், ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் பார்வையிட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி, இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காரைக்கால் விரைவு ரயில் மூலமாக, நேற்று இரவு புறப்பட்டார். பின்னர், புயலால் வீடுகளை இழந்தவர்கள், கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகளையும், தென்னைகளை இழந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பாய், போர்வை உள்ளிட்ட 27 விதமான நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளோம். மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம். 7886 ஹெக்டேரில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 415 முகாம்களில் 2 லட்சத்து 85 ஆயிரம்பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.