Tamil Nadu Lok Sabha Election Result:18 வது மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதியுடன் 7 கட்டங்களாக நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சென்னையில் உள்ள வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதி, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இங்கு சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருகை தரும் ஊழியர்கள், முகவர்கள் அனைவரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மையங்களுக்கு அனுமதிக்கப்டனர். முன்னதாக முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொகுதி வாரியாக நுழைவு வாயில் முன்பு அதற்கான தனி இடத்தில் வைக்கப்பட்டது. மேலும், சிறப்பு மருத்துவ முகாம், உணவு வழங்குவதற்கு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு இரண்டு அரங்குகளில் 9 மேசைகள் போடப்பட்டிருந்தது. சிறப்பு பொதுப்பார்வையாளர்கள் முத்தாடா ரவிச்சந்திரா மற்றும் முகம்மது சபிக் முன்னிலையில், தென்சென்னை தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தென்சென்னை தொகுதியில் 9 மணி 22 நிமிடங்கள் வரை தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை. அதன்பிறகு தென்சென்னை தொகுதியில் பதிவான 3973 தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தபால் வாக்கு எண்ணும் பணி தாமதம் ஆனாலும் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்று முடிவில் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை விட 12507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தென்சென்னை தொகுதியில் அதிமுகவை விட 5569 வாக்குகள் பெற்று பா.ஜ.க இரண்டாம் இடத்தில் இருந்தது.
நட்சத்திர தொகுதியாக உள்ள தென் சென்னையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கிடையே நான்கு முனைபோட்டி நிலவுகிறது. தி.மு.க சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், அ.தி.மு.க சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன், நா.த.க சார்பில் சு.தமிழ்செல்வி ஆகியோர் களத்தில் உள்ளனர். இதில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் பின்னணியில் உள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதே பல வட சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ