தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது!
கடந்த 2015-ஆம் ஆண்டு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை கொண்டு வந்தது. இந்தப் புதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிலம் எடுப்பு தொடர்பாகத் தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் மற்றும் அதற்கான அனைத்து அரசாணைகளும் செல்லாது என அறிவித்தது.
மேலும், இந்த 3 நில கையகப்படுத்தல் சட்டங்களின் கீழ் தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்திருந்தால் இந்த தீர்ப்பு பொருந்தாது எனவும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த தீர்ப்பின் காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில்., நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்துள்ளதால் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பாதிப்படைந்து உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து, திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.