'அண்ணா' மீது ஆணையாக நிச்சயம் நிறைவேற்றுவேன் -முதல்வர் ஸ்டாலின் சபதம்

MK Stalin In Salem: திமுகவின் சாதனைகளை எத்தனை நச்சு சக்திகள் வந்தாலும் வீழ்த்திவிட முடியாது ஆத்தூரில் நடைபெற்ற ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சூளுரை. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 24, 2022, 07:22 PM IST
  • திமுக ஆட்சிக்கு வந்தததும், முதல்வர் பதவியேற்கும் போது சிறு தயக்கம் இருந்தது.
  • பெண்களுக்கு இலவச பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தி மக்களின் சமூக மதிப்பை உயர்த்துவதான் திராவிட மாடல் ஆட்சி.
'அண்ணா' மீது ஆணையாக நிச்சயம் நிறைவேற்றுவேன் -முதல்வர் ஸ்டாலின் சபதம் title=

MK Stalin In Salem: சேலம் மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள செல்லியம்பாளையத்தில் இன்று நடைபெற்றது. மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசியது,

நேருவுக்கு நிகர் நேருதான்:
கோட்டையும் கோவிலும் அமைந்த ஊராக ஆத்தூர் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ வீரர்கள் இருந்த ஊர் ஆத்தூர். திமுகவை சேர்ந்த தொண்டர்கள் ராணுவ வீரர்களாக உள்ளனர். சேலம் மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமாக ஆத்தூர் உள்ளது. இவ்வளவு பெரிய ஊரில் ஒரு பெரிய மாநாட்டை நடத்துவது போல ஏற்பாடு செய்துள்ளனர். நேரு இருக்கும் இடம் எல்லாம் மாநாடு போலத்தான் இருக்கும். நேருவுக்கு நிகர் நேருதான். நேருவுக்கு பெயர் மாநாடு என்றுதான் அர்த்தம். நேருவை பாராட்டி பேசுவது என்னை நானே பேசுவது போல என்பது தான் அர்த்தம் என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும், அடுத்து வந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்புவதற்காக நேருவை அனுப்பி வைத்தோம். நேரு வந்தார். வென்றார் என்ற நிலையை அவர் ஏற்படுத்தியுள்ளார். அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் திமுக வெல்லும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் சுறுப்பாக பணியாற்றி வருவதாக நேரு சொல்லி இருக்கிறார். அவர்கள் மாவட்டத்தை வழிநடத்துவதோடு, முப்படை தளபதிகள் போல செயல்படுகிறார்கள். அதே நேரத்தில் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க: 75 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறை... மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் எழுச்சி பெற்றிருக்கிறது:
அரசியல் பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் திமுக கொடியின் வரலாறு உள்ளது. சமூகத்தின் இருண்ட நிலையை நீக்கி ஒளியூட்டும் உதயசூரியன் நம்மிடம் இருக்கிறது. கடந்த ஆண்டு மே 7-ம் தேதி திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வர் பதவியேற்கும் போது சிறு தயக்கம் இருந்தது. 10 ஆண்டுகளில் அதிமுக செய்த முறைகேடுகளை சரி செய்ய முடியுமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தமிழகம் எழுச்சி பெற்றிருக்கிறது. உறங்கி கிடந்திருந்த நிர்வாகம் பேரெழுச்சி பெற்றிருக்கிறது. ஓராண்டு காலத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்தியாவின் சிறந்த மாநிலமாக, அனைத்து வளங்களையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது என்றார்.

மக்கள் மட்டுமல்ல இயற்கையே நம் பக்கம் இருக்கிறது:
வழக்கமாக மேட்டூரில் ஜூன் 12-ம் தேதிதான் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர்கள் குறுவை சாகுபடி பெற முடியும். அதிமுக ஆட்சியில் ஒரு முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளில் காலதாமதமாகவே திறக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. நடப்பாண்டில் இயற்கையே இந்த ஆட்சிக்கு ஆசி வழங்கியது போல தண்ணீர் வரத்து அதிகமாகிவிட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு மே மாதத்தில் தண்ணீர் திறப்பது இதுதான் முதல் முறையாகும். மக்கள் மட்டுமல்ல இயற்கையே நம் பக்கம் இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம் என்றார்.

எதிர்க்கட்சிகளும் பாராட்டக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி:
பெண்களுக்கு இலவச பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு வேலைக்கு, தனியார் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான மாத செலவில் ரூ.2500 மீதமாகியுள்ளது. மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்கள் லட்சக்கணக்கானவர்களை சென்றடைந்துள்ளது. பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தது. கொரோனா காலத்தில் ரூ.4 ஆயிரம், மளிகைப் பொருட்கள் கிடைத்தது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம், தமிழகத்தின் அனைத்த தொகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது. இதன் மூலம் அந்தந்த தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப் படாத திட்டங்கள் நிறைவேற்றப்படும். திமுக தொகுதி மட்டுமல்ல, 234 தொகுதிகளுக்கும் அனைத்து திட்டங்களையும் சரிசமமாக வழங்கி வருகிறோம். எதிர்க்கட்சிகளும் பாராட்டக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றார்.

மேலும் படிக்க: இதுவே திராவிட மாடல்...! நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டது குறித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட்

உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால் திமுக அரசை பாராட்ட வேண்டும்:
தமிழகத்தை விட்டு சென்ற தொழில் நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க வந்துள்ளன. திமுக ஆட்சியின் மீது எந்த குறையும் சொல்ல முடியாதவர்கள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். 2500கோடி மதிப்பிலான திருக்கோவில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் முழுமையாக பதிவேற்றப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால் திமுக அரசை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் மதவாதத்தை தூண்டி திமுக அரசு அவதூறு பரப்பி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்யவில்லை:
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவருடைய தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. திமுக நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு கேட்டு 10 ஆயிரம் பேர் திரண்டனர். அதிமுக ஆட்சியில் சாலை மட்டுமே அமைக்கப்பட்டது. அதுவும் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைதான் அமைக்கப்பட்டது. எடப்பாடியில் ஜவுளிப்பூங்கா, கொங்கணாபுரத்தில் தொழிற்பேட்டை, மேட்டூர் அணை உபரிநீர் திட்டம், உழவர் கூட்டுறவு சங்கம் என எந்த கோரிக்கையையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை.

இன்றைக்கு தினந்தோறும் திமுக அரசை விமர்சித்து அறிக்கை விடும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்யவில்லை. திமுக அரசு கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியை விட ஓராண்டில் அனைத்து வித சாதனைகளையும் செய்துள்ளது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், சேலம் மாவட்டத்தில் விரைவில் ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. ரூ.28 கோடி மதிப்பில் வெள்ளிக் கொலுசு பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. கருப்பூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். 

மேலும் படிக்க: என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்..மத்திய அரசை சாடிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அதிகமாக உயர்த்தி விட்டு, குறைவாக குறைக்கிறார்கள்:
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல் விலையை குறைப்போம் என சொல்லி ரூ.3 குறைத்துள்ளோம். ரூ.1160 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது .மத்திய அரசு வரியை குறைக்கும் போது மாநில அரசின் வரியும் குறையும். 2014ம் ஆண்டு பிஜேபி அரசு பொறுப்பேற்கும் போது இருந்த விலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனை ஒப்பிட்டுப் பார்த்தால் மத்திய அரசு இன்னும் விலையை குறைக்க வேண்டும். 5 மாநிலங்களில் தேர்தல் வந்ததால் குறைக்கப்பட்ட விலை மீண்டும் ஏற்றப்பட்டது. அதிகமாக உயர்த்தி விட்டு, குறைவாக குறைக்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக்கும் மாநில அரசு கல்வி, மருத்துவம், மின்சாரம், சத்துணவு உள்ளிட்டவை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி பணியாற்றுவதற்காக உரிய நிதி ஒதுகீடு மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.21,190 கோடி இதுவரை வரவில்லை. பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

திமுகவின் சாதனைகளை வீழ்த்திட முடியாது:
கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதால் பொதுக்கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளோம். கடந்த 10 நாட்களாக தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திமுக தொண்டர்கள் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மனதில் பதிய வைக்க வேண்டும். ஆளுங்கட்சியாக செய்யும் சாதனைகள், எதிர்க்கட்சியாக இருக்கும்போது நடத்திய போராட்டங்கள்தான் திமுகவை உயிர்ப்புடன் வைத்துள்ளது. திமுகவின் சாதனைகளை எத்தனை நச்சுசக்திகள் வந்தாலும் வீழ்த்திட முடியாது. இதற்கு காரணம் திமுக தொண்டர்கள்தான். தொடர்ந்து மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் ஆட்சி இதுதான். எனது அரசு என நான் எப்போதும் சொல்லவில்லை. நமது அரசு என்றார்.

மேலும் படிக்க: காமராஜர், கலைஞரை போல் எனது ஆட்சியில் பொற்காலம் - முதலமைச்சர் பெருமிதம்!

திராவிட மாடல் ஆட்சி -முதல்வர் விளக்கம்:
திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், சமூக நீதியும் இணைந்தது. பெரியார், அண்ணா , கலைஞர் வழியில் திமுக தொண்டர்கள் திராவிட மாடலை எட்டுத் திக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். திராவிடம் என்ற சொல் அரசியல் தத்துவம் என எடுத்தாளப்படுகிறது. தமிழை வளர்த்தது, சாதியை ஒழித்தது என பல்வேறு சிந்தனைகளை திமுக கொண்டு வந்துள்ளது. 5 முறை தமிழகத்தை ஆட்சி செய்து கலைஞர் கருணாநிதி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். சுயமரியாதை, மாநில சுயாட்சியை திராவிட மாடல் ஆட்சிதான் நிறைவேற்றியுள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தி மக்களின் சமூக மதிப்பை உயர்த்துவதான் திராவிட மாடல் ஆட்சி.

உலகின் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்:
திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது. சீர் செய்யும். யாரையும் பிரிக்காது. அனைவரையும் ஒன்று சேர்க்கும். அனைவரையும் சமமாக நடத்தும். தோளோடு தோள் நின்று அரவணைக்கும்.. நரிக்குறவர்கள், இருளர் இன மக்கள், மாற்றுத் திறனாளிகள் என நலிவுற்றுவர்களின் தேவையை நிறைவேற்றப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் மட்டுமன்றி தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால், உலகின் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும். நிதி நிலைமை சீரானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும்.

அண்ணா மீது ஆணையாக நிச்சயம் நிறைவேற்றுவேன்:
கொடுத்த வாக்குறுதிகளை அண்ணா மீது ஆணையாக நிச்சயம் நிறைவேற்றுவேன். கடுமையான நிதி நெருக்கடியை மீறித்தான் ஓராண்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். என்னுடைய சக்தியை மீறி தமிழக மக்களுக்காக உழைக்க நான் தயாராக கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் கண்டிப்பாக மறக்க மாட்டேன் நிச்சயம் நிறைவேற்றுவேன் என உணர்ச்சி பொங்க பேசினார். இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் எனும் பெயரை மாற்ற அரசு குழு அமைக்க வேண்டும் - நக்கல் அடிக்கும் அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News