பத்திரிகையாளர்களை த்தூ என்று துப்பிய விவகாரம் தொடர்பாக டெல்லி இந்தியன் பிரஸ் கவுன்சிலிடம் விஜயகாந்த் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை த்தூ என துப்பினார். இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜயகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டதுடன், இந்திய பிரஸ் கவுன்சிலில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று டெல்லியில் இந்திய பிரஸ் கவுன்சில் முன்பு விஜயகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி பத்திரிகையாளர்களை நோக்கி எச்சில் துப்பியதற்காக மன்னிப்பு கோரினார். மேலும், சேலத்தில் பத்திரிகையாளருக்கு மிரட்டல் விட்டதற்காகவும் வருத்தம் தெரிவித்தார். விஜயகாந்த்தின் மன்னிப்பு மற்றும் வருத்தத்தை ஏற்று, அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக இந்திய பிரஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.